புதுடெல்லி: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. இதன்படி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பாட்மிண்டன் வீரர்களான ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். ஷிராக், சாட்விக் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தது. மேலும் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தது.
அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்ளிட்ட 26 பேர் தேர்வாகி உள்ளனர். 33 வயதான முகமது ஷமி, கடந்தமாதம் முடிவடைந்த ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 24 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சமீபத்தில்கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். இவர், இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.துரோணாச்சார்யா விருதுக்கு தமிழகத்தைசேர்ந்த ஆர்.பி.ரமேஷ் தேர்வாகி உள்ளார்.
0 கருத்துகள்