2023-க்கு விடை கொடுக்கும் வேளையில், இந்த ஆண்டில் விளையாட்டு உலகில் படைக்கப்பட்ட சாதனைகள் முதல் அரங்கேறிய சர்ச்சை - சோதனைகள் வரை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். விளையாட்டு களம் என்பது நொடிக்கு நொடி பரபரப்பும், சுவாரஸ்யமான ஆச்சரியங்களும் நிறைந்தது. அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் துளி அளவும் பஞ்சம் வைக்காமல் இனிதே நிறைவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகள் முதல் உள்ளூர் அளவிலான போட்டிகள் வரை ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி என தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனைகள் மகத்தானவை.
பிரிஜ் பூஷண் VS சாக்‌ஷி மாலிக் - மல்யுத்தம்: வழக்கமாக விளையாட்டு வீராங்கனைகள் குறித்த திரைப்படங்களில் வரும் ஒன்லைனர் போல தான் பிரிஜ் பூஷண் சரண் சிங் vs சாக்‌ஷி மாலிக் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இருந்தது. ஜனவரியில் முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. அவர் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தியும், விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆணையம் அமைத்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது.
0 கருத்துகள்