சென்னை: ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 174 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 8 பந்துகளை மீதும் வைத்து 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மான் (4 விக்கெட்கள்) முக்கிய பங்களிப்பு செய்தார். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (37), அஜிங்க்ய ரஹானே (27), டேரில் மிட்செல் (22), ஷிவம் துபே (34), ரவீந்திர ஜடேஜா (25) ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். அங்கும் இங்குமாக 2 முதல் 3 ஓவர்களில் ரன்களை வழங்கியிருந்தோம். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தவுடன், நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். 10 முதல்15 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தால் மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும். பெங்களூரு அணியினர் சிறப்பாக ஆட்டத்துக்குள் திரும்பி வந்தனர்.
0 கருத்துகள்