ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல்சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன் குவித்தது. ரஜத் பட்டிதார் 20 பந்துகளில், 50 ரன்களும் விராட் கோலி 43 பந்துகளில், 51 ரன்களும் கேமரூன் கிரீன் 20 பந்துகளில், 37 ரன்களும் விளாசினர்.
207 ரன்கள் இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 171ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷாபாஷ் அகமது 40, அபிஷேக் சர்மா 31 ரன்கள் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அடைந்த 6 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெங்களூரு அணி. அந்த அணி9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் தொடர்கிறது. அதேவேளையில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த ஹைதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைதராபாத் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
0 கருத்துகள்