சென்னை: ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஈக்விடாஸ் நிறுவனம் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தமிழகம் மற்றும் கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 23 மாவட்டங்களில் இருந்து 108 பள்ளிகள் பங்கேற்கின்றன.
ஜேஎஸ்கே டி20 தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட போட்டி வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சென்னை உட்பட 23 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 15 இடங்களில் நடத்தப்படுகிறது. தொடரின் 2-வது மற்றும் இறுதிக்கட்ட போட்டி ஜனவரி 17 முதல் 22-ம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதும்.
0 கருத்துகள்