Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மக்களுக்காக தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் அளித்தது போக மீதி ரூ.850 - கேரள ஹீரோ ஜனார்தனன்!


கேரள மக்கள் மத்தியில் கடந்த மூன்று நாட்களாக ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஜனார்த்தனன். அதற்கு காரணம், கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு தடுப்பூசி வாங்குவதற்கான தன் வாழ்நாள் சேமிப்பை அப்படியே அளித்து நெகிழ்வைத்ததுதான்.

கேரளாவின் கண்ணூர் இவரின் சொந்த ஊர். இரு செவிகளிகும் கேட்கும் திறனற்ற ஜனார்த்தனன், சாதாரண பீடி தொழிலாளி. இவரின் மனைவி கடந்த வருடம் முன்பு நோய்வாய்பட்டு இறந்துவிட, தற்போது தனிமரமாக வசித்து வருகிறார். மனைவியின் மரணத்துக்கு பின் ஜனார்த்தனன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். மனைவியின் பிரிவின் துயர் தாங்க முடியாமல் இருந்த அவர், சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தன் மனதை அமைதியாக வைத்திருக்க தினமும் இரவில் மாத்திரை சாப்பிடும் அவர், சில தினங்கள் முன்பும் அதேபோல் மாத்திரை எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த தருணத்தில்தான், இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேசிய செய்தியை பார்த்திருக்கிறார் ஜனார்த்தனன். மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கும் போதிலும், மாநில அரசும் பணம் செலவழித்து தடுப்பூசிகளை வாங்க வேண்டும் என்ற அவசியத்தையும் அறிந்துகொண்ட ஜனார்த்தனன், மாநில அரசுக்கு உதவ ஒரு முடிவெடுத்தார். மறுநாள் காலையில் முதல் ஆளாக கண்ணூரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிக்குச் சென்றவர், தன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்தை வங்கி மேலாளரிடமே சொல்லி முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டு திகைத்த வங்கி மேலாளர், ஜனார்த்தனனை தனியாக அழைத்து 'ரூ.1 லட்சம் மட்டும் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள்' என்று பேசியிருக்கிறார். அவர் அப்படி சொல்ல காரணம், இந்த 2 லட்ச ரூபாய் பணம் ஜனார்த்தனின் வாழ்நாள் சேமிப்பு மட்டுமல்ல; பீடிக் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றபோது கிடைத்த வருங்கால வைப்பு நிதி, இறந்த மனைவி ஓய்வு பெற்றபோது கிடைத்த பணிக் கொடை, மாதந்தோறும் மாநில அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷன் என எல்லாம் சேர்நததுதான் அந்தப் பணம். இதனால் வங்கி மேலாளர் வலியுறுத்த, அவரின் பேச்சை ஜனார்த்தனன் கேட்கவில்லை. முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள 58 வயதான ஜனார்த்தனன், "முதல்வர் தடுப்பூசிகளை இலவசமாக கொடுக்கிறோம் என்று சொன்ன அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக்கொண்டே அமர்ந்தேன். இரவில் நான் அருந்தும் மனநல மருந்துகள் பொதுவாக என்னை திசைதிருப்ப வைக்கும். ஆனால், அன்றைய தினம் எதுவும் நடக்கவில்லை. இரவே வங்கி கணக்கு புத்தகத்தை சரிபார்த்தேன். அதில் ரூ.2,00,850 இருந்தது. அதைக் கண்ட பிறகே நான் மகிழ்ச்சி அடைந்தேன். வங்கிப் புத்தகத்தை பார்த்த பிறகு இறுதியாக காலை எட்டு மணிக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கினேன்.

வங்கியில் சென்று விஷயத்தை கூறியபோது, வங்கியின் மேலாளரும் மற்ற ஊழியர்களும் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பேசினர். நான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் போதாதா என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால், நான் நேற்றிரவு என்னால் உறங்கமுடியவில்லை. இன்றிரவு நான் தூங்க வேண்டும் என்றால், நான் இதை செய்தாக வேண்டும் என்று என் நிலையை உணர்த்தினேன்" என உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஜனார்த்தனன் அப்படி சொன்னபிறகே, வங்கி அதிகாரிகள் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். இப்போது ஜனார்தனனின் வங்கிக்கணக்கில் இருப்பது ரூ.850 மட்டுமே. அவரின் செயல் வங்கி அதிகாரிகள் மூலமாக வெளியில் தெரியவர, ஒட்டுமொத்த கேரள மக்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- தகவல் உறுதுணை: The News Minute

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்