ஏப்ரல் 24-ம் தேதிக்குப் பிறகு, கொரோனா போராளிகளுக்கு புதிய காப்பீட்டு பாலிசி அமலுக்கு வரும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி இதுவரை... - இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12.38 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை 12,38,52,566 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பூசி போடப்பட்டு 93-வது நாளான நேற்று (ஏப்.18) 12,30,007 தடுப்பூசிகள் போடப்பட்டன.
தினசரி பாதிப்பு: நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.58 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 68,631 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. 20 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 19,29,329-ஆக உள்ளது. இந்த அளவு நாட்டின் மொத்த பாதிப்பில் 12.81 சதவீமாக உள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,29,53,821-ஆக உள்ளது. தேசிய அளவில் குணமடையும் விகிதம் 86 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு: தேசிய அளவில் கொரோனா உயிரிழப்பு தற்போது 1.19 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா போராளிகளுக்கான காப்பீடு: பிரதமரின் ஏழைகள் நலன் உதவித் திட்டம் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இது, 2021 ஏப்ரல் 24-ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தால், அவர்களின் குடும்ப நலனுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. இது கொரோனா போராளிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை அளித்துள்ளது. இதுவரை 287 பேருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஏழைகள் நலன் உதவித் திட்ட காப்பீடு பாலிசிகளின் உரிமை கோரல்கள் 2021 ஏப்ரல் 24-ம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். அதன்பின், கொரோனா போராளிகளுக்கு புதிய காப்பீட்டு பாலிசி அமலுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்