Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் 2021 : டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!

கிரிக்கெட் உலகின் மாபெரும் டி20 லீக் தொடர்களில் ஒன்று இந்தியன் பிரிமியர் லீக். சுருக்கமாக ஐபிஎல். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை பதினோரு லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் அணிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் வகையில் பிரதான பங்கு வகிக்கிறது டாஸ். இந்த சீசனின் முதல் ஆறு போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் பந்து வீச்சையே தேர்வு செய்திருந்தனர். ஆனால் டாஸில் வென்ற அணிகளால் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக இரண்டாவதாக வெற்றிக்கான இலக்கை விரட்டும் போது அணிகள் தடுமாறுகின்றன. அதுவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் ரன் குவிப்பதே சவாலான காரியாமக உள்ளது. 

image

அதனை புரிந்து கொண்ட அணிகள் கடந்த சில போட்டிகளாக டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வதை பிரதான ஆப்ஷன்களாக வைத்துள்ளன.

கொரோனா காரணமாக தற்போது மும்பை மற்றும் சென்னை என இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது. அதுவும் இரண்டாவதாக பேட் செய்து ரன்களை விரட்டுவது எளிது. அதனால் மும்பையில் நடைபெற்றுள்ள ஐந்து போட்டிகளில் டாஸ் வென்ற அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஆனால் சென்னையில் நடைபெற்ற முதல் நான்கு போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தன. 

அதில் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்த மூன்று போட்டிகளில் டாஸ் வென்ற ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவி இருந்தன. அதை கவனித்த அணிகள் அதற்கடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பேட்டிங் தேர்வு செய்து வெற்றியும் பெற்றுள்ளன. மும்பை, ஐதராபாத் அணியையும், பெங்களூர், கொல்கத்தா அணியையும் டாஸ் வென்று வீழ்த்தி உள்ளன. 

image

ஆடுகளம் சேஸிங்கிற்கு கைகொடுக்காதது ஏன்? 

மும்பை vs ஐதராபாத் மற்றும் பெங்களூர் vs கொல்கத்தா அணிகள் சென்னை மைதானத்தில் அண்மையில் விளையாடிய போது ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆடுகளம் குறித்த ரிப்போர்டில் முதலாவதாக பேட் செய்யும் அணிக்கே சாதகம் என்று தெரிவித்திருந்தனர். அதுவும் முதல் பத்து ஓவர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் குவிக்க உதவினாலும் அதற்கடுத்த பத்து ஓவர்களில் பந்து வீச்சுக்கு சாதாகமாகவே இருக்கும் என்றும். சுழற் பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகள் திரும்பும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனை மேத்யூ ஹைடன், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், டேனி மோரிசன் சொல்லியிருந்தனர். அதுவும் ஹைடன் அணிகள் நிச்சயமாக டாஸ் விவகாரத்தில் தங்களது அணுகுமுறையை மாற்றும் என சொல்லி இருந்தார். 

அதே போல மும்பைக்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு பேர்ஸ்டோ மற்றும் வார்னர் நல்ல தொடக்கத்தை கொடுத்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் பிற்பாதியில் ஆடுகளத்தின் தன்மை மாறியதும். அதற்கு உகந்த வகையில் பவுலர்கள் அடாப்ட் செய்ததுமே மும்பையின் வெற்றிக்கு உதவியது. 

ஆனால் பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா 205 என்ற இலக்கை விரட்டியதால் தொடக்கம் முதலே சரிவை சந்தித்து வந்தது. அந்த இரண்டு போட்டியிலும் மும்பை மற்றும் பெங்களூர் அணி கேப்டன்களும் முதல் பேட் செய்யும் முடிவுடன் செயல்பட்டனர். அந்த மாறுபட்ட டாஸ் கணக்கினால் வெற்றியும் பெற்றனர். 

image

அதன்படி நடப்பு சீசனில் சென்னையில் நடைபெற உள்ள எஞ்சிய நான்கு  போட்டிகளில் டாஸ் வெல்லும் அணிகள் முதல் பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

- எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்