கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொரோனா வேகமாக பரவிய நிலையில், அரசியல் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் சாடினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்தை மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்று உள்ளார். வடக்கு கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மம்தா பேசுகையில், ''சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நான் வரவேற்கிறேன். தேர்தல் ஆணையம் தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடத்திய முறை குறித்து, வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்ததும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
மாநிலத்தில் தொற்று அதிகரித்து இருக்கும் நிலையிலும் கடைசி சில கட்ட தேர்தல்களை இணைத்து நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமுமே காரணம்'' என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்