ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு எடுத்திருந்த முக்கிய முடிவுகளில் சிலவற்றை, உச்ச நீதிமன்றம் இன்று முற்றிலுமாக மறுத்து, அவற்றுக்கு தடை விதித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அதனை இலவசமாக வழங்க அனுமதிக்க கோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, "எக்காரணத்தைக் கொண்டும் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது" என தமிழக அரசியல் கட்சிகளும், மாநில அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தது. முதல்நாள் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை அப்படியே முன்வைத்தது. ஆனால், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, அனைத்து தரப்பில் இருந்தும் வரக்கூடிய உதவிகளை எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என மத்திய அரசு கூறியதால், 'ஆலையை ஏன் தமிழக அரசே எடுத்து நடத்த கூடாது?' என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக நேற்றைய தினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை மீண்டும் திறக்க அனைத்து கட்சிகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தன. இதனை பிரமாணப் பத்திரம் ஆகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. உடன், தயாரிக்கப்படும் ஆக்சிஜனை விநியோகிக்கும்போது, அதை தங்களுக்கே கொடுக்க வேண்டுமென முடிவெடுத்து, அதை தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் மனுவில் வலியுறுத்தியிருந்தது.
இந்த முடிவினை முழுமையாக உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை, மத்திய அரசு தொகுப்பிற்கு மட்டுமே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்படி தாங்கள் வலியுறுத்திய நிலைபாடுகளை தொடர்ந்து மறுத்த உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு இறுதியாக 'தமிழகத்திற்கு வழங்கியதற்கு போக மீதம் உள்ள ஆக்சிஜனைதான், மற்ற மாநிலங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்' என்ற நிலைப்பாட்டை கூறியது. இதையும் உச்ச நீதிமன்றம் மறுத்தது.
மேலும், எந்த மாநிலத்துக்கு எவ்வளவு ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஒருவேளை தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், நீதிமன்றத்தை நாடி தேவையானவற்றை கேட்டுப் பெறுங்கள் என கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
மற்றொரு பக்கம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு பணி நடக்கும்போது, அதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அடங்கிய கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு ஏற்கெனவே அமைத்து இருந்தது. அந்தக் குழுவில் உள்ளூர் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதையும் உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.
கண்காணிப்புக் குழு தொடர்பான உத்தரவில், 'ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்க ஆலை அமைந்திருக்கும் மாவட்டமான தூத்துக்குடியின் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, மாவட்ட பொறியாளர், இந்த விஷயத்தில் தெளிவுகொண்ட 2 அரசு அதிகாரிகள் ஆகியோரை கொண்ட மேற்பார்வை குழுவையும் அமைக்க வேண்டும்.
இந்த இரண்டு அரசு அதிகாரிகளில் யார் இடம்பெறவேண்டும் என்பதை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் ஐந்து பேரில் இரண்டு பேரை உள்ளூர் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். 48 மணிநேரத்திற்குள் அவ்வாறு உள்ளூர் மக்கள் தேர்ந்தெடுக்க தவறும் பட்சத்தில், அவர்களை தமிழக அரசே நியமிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என தமிழக அரசு கணித்தது. ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் காவல்துறையினர் அத்தனை பேரும் பாதுகாப்பு பணிகளில் இருக்கின்றனர் என்றும், அவர்களால் இதில் கவனம் செலுத்த முடியாது என்றும் தமிழக அரசு கூறியது. இந்த விவகாரத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க, உச்ச நீதிமன்றம் வேறு முடிவுகளை வெளியிடும் என தமிழக அரசு எதிர்ப்பார்த்த நிலையில், அது குறித்த விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை. இப்படி தமிழக அரசின் பல நிலைப்பாட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
- நிரஞ்சன் குமார்
தொடர்புடைய செய்திக் கட்டுரை: "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம், ஆனால்..." - உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களின் முழு விவரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்