'ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டுமெனில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் நடைபெற்ற வாத, பிரதிவாதங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் மற்றும் உத்தரவு விவங்களை சற்றே விரிவாக காணலாம்.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவியிருக்கும் சூழலில், நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக மோசமாக நிலவுகிறது. சூழலை சமாளிக்க, அரசு ஆக்சிஜன் உற்பத்திக்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மருத்துவ ஆக்சிஜனை தயாரித்து வழங்க பல தனியார் நிறுவனங்கள் முன்வந்து கொண்டிருக்கின்றன.
அப்படியான ஒன்றாக, தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவதற்காக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கான வசதிகள் இருப்பதாகவும், ஆகவே உடனடியாக ஆலையை திறக்க உத்தடவிடுமாறும் வேதாந்தா நிறுவனத்தினர், உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணைகள் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் இடைக்கால மனுவை தாக்கல் செய்த வேதாந்த நிறுவனத்தினர் தங்கள் மனுவில் "நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க, தூத்துக்குடியில் உள்ள எங்களது ஸ்டெர்லைட் ஆலையில், அதை செயற்கையாக தயாரித்து, அதனை இலவசமாக மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். ஆகவே அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கவேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
முன்வைத்த வாதங்கள் என்னென்ன?
இந்த மனு விசாரணைக்கு வந்ததும், முதலில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஆலையை திறக்க முடிவு செய்யப்பட்டது, வேதாந்தா நிறுவனத்திற்கு இடைக்கால அனுமதி வழங்குவது ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும்தான் இதையே காரணமாக வைத்துக்கொண்டு ஆலையை தொடர்ந்து இயக்க அந்த நிறுவனம் எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது" என வாதிட்டார்.
பிறகு பேசிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், "ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் ஆக்சிஜன்கள் மத்திய அரசு வசம் மட்டும் தான் ஒப்படைக்கப்பட வேண்டும். ஏனெனில், நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் எவ்வளவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது என்ற தகவல்கள் எங்களிடம்தான் இருக்கும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டால்தான், ஆக்சிஜன் விநியோகம் சீராக இருக்கும். அந்தவகையில், மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இது ஒப்படைக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்" என வாதிட்டார்.
இந்த வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதி சந்திரசூட், "ஆலை நிர்வாகம் மற்றும் இயக்கம் தமிழக அரசின் கண்காணிப்பின் கீழ் இருக்கலாம், அதே வேளையில் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு விநிநோகிப்பதை மாநில அரசு தடுக்கக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் நடைமுறையிலும், உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மத்திய அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் வழக்கம் இருந்துள்ளது. ஆகவே அதையும் கருத்தில்கொள்ளுங்கள்" என கூறினார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மத்திய தொகுப்பிற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருக்கும் விதிமுறை. அதை நாங்கள் நிச்சயம் பின்தொடர்கிறோம். ஆனால், அதற்கு பின் நடைபெறும் ஆக்சிஜன் விநியோகத்தில், அது தயாரிக்கப்படும் எங்கள் மாநிலத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அதுவே எங்கள் கோரிக்கை" என கூறினார். இதற்கு, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தார். குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை, மத்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், "இத்தகைய விஷயத்தில் முடிவு செய்யவேண்டியது மத்திய அரசு மட்டும் தானே தவிர, மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் கிடையாது" என திட்டவட்டமாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தற்போதைய சூழலில் இது தேவையற்ற வாதம். இது குறித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து மற்ற விஷயங்களுக்கு வாருங்கள்" என கூறினர்.
இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்போது, அதனை கண்காணிப்பதற்காக தமிழக அரசு குழு அமைக்கவிருப்பதாக கூறியது. அந்தக் குழுவில் உள்ளூர் மக்களும் இடம்பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், "ஏற்கெனவே உள்ளூர் மக்களால் எங்களுக்கு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே உள்ளூர் மக்கள் யாரும் நிச்சயமாக குழுவில் இடம் பெறக்கூடாது" என வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதம் வைத்தார். வேதாந்தா நிறுவனத்தின் இந்த வாதத்திற்கு ஆதரவு வழங்கிய மத்திய அரசு, "ஆக்சிஜன் தயாரிப்பு கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்கள் யாரும் இடம்பெறக் கூடாது, அவர்களால் வீண் குழப்பம் ஏற்படலாம்" என கூறியது.
இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு பிரச்னை கடுமையாக இருக்கக் கூடிய சூழலில், உள்ளூர் மக்கள் குழுவில் இடம் பெறுவது மிகவும் அவசியமானது" என கூறினார்
இறுதியாக பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மேற்பார்வை குழு அரசு அதிகாரிகள், நிபுணர்களை கொண்டதாக அமையுங்கள், வேண்டுமெனில் அந்தக் குழு அப்பகுதி மக்களிடமும், சுற்றுசூழல் ஆர்வலரிடமும் இது குறித்து கருத்து கூறட்டும்" என கூறினார்.
இந்த பதிலை ஏற்க மறுத்த மத்திய அரசு, "தமிழகத்தில் அப்படியான சுற்றுச்சூழல் நிபுணர்கள் யாரும் இல்லை. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர். அவர்களின் ஒருவேளை இந்தக் குழுவில் இடம்பெற்றால் குழப்பங்கள்தான் மிஞ்சும்" என கூறினார்.
கடும் வாக்குவாதம்:
இந்த வாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் பிரதிநிதியாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், "ஸ்டெர்லைட் ஆலையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே, இந்த ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது. நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்பது எங்களுக்கு புரிகிறது. தேவை இருக்கும்போதும், அதனை தடுக்க நினைக்கிறோம் என இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். நாங்கள் ஒன்றும் தேச விரோதிகள் அல்ல. இந்த நிறுவனம் மிக மிக மோசமான நிறுவனம்" எனக் கூறினார்.
இவரின் வாதத்தை வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார். அவர் வாதிடும்போது, "நாடு இக்கட்டான சூழலில் தவிக்கும் நிலையிலும், ஆக்சிஜன் உற்பத்தியை தடுக்கும் இவர்கள் தேசவிரோதிகள்தான்" என கடுமையாக கூறினார்.
இதனை அடுத்து இருதரப்பினரிடையே மோதல் உருவாவதை உணர்ந்த நீதிபதிகள், "நாடே தற்பொழுது இக்கட்டான சூழலில் இருக்கிறது. இத்தகைய தருணங்களில் இது போன்ற விஷயங்களில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம். முதலில் இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீள்வது என்பதை யோசிப்போம்" எனக் கூறி வழக்கின் போக்குக்கு அவர்களை கொண்டுவந்தார்.
இதன்பின் பேசிய ஆலை எதிர்ப்பு குழு வழக்கறிஞர், "ஒருவேளை ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஆலை திறக்கப்படுகிறது என்றால், உள்ளூர் மக்கள் நியமிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிபுணர்கள் ஆகியோர் அரசு அமைக்கும் குழுவில் இடம்பெற வேண்டும்" என கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உள்ளூர் மக்கள் குழுவில் இடம்பெறுவது அவசியம். ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், காவல்துறையினர் அதற்கான பாதுகாப்பு பணிகளில் இடம் பெற்றிருக்கின்றனர். ஆகவே, இந்த விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவது இயலாத காரியம். அதனால் அது குறித்து மட்டும், நீதிமன்றமே முடிவு செய்யலாம்" என கூறி தங்களது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினர்.
தொடர்ந்து நீதிபதிகள், "ஆலை இயங்க அனுமதி வழங்கினால் எவ்வளவு நாட்களுக்குள் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவீர்கள்?" என கேள்வி கேட்க, அதற்கு "10 நாட்களுக்குள் செய்துவிடுவோம்" என வேதாந்தா நிறுவனம் கூறியது. "அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவைப்படுவர்?" என்ற நீதிபதி கேள்விக்கு "250 பேர்" என வேதாந்தா நிறுவனம் கூறியது.
உத்தரவு விவரம்:
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தங்களது உத்தரவுகளை பிறப்பிக்க தொடங்கினர். அந்த உத்தரவின்படி, ஆலைக்குள் பணியாற்ற உள்ள ஊழியர்கள் மற்றும் நிபுணர்கள் பட்டியலை முன்கூட்டியே கண்காணிப்புக் குழுவிடம் வேதாந்தா நிறுவனம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆலைக்குள் ஆக்சிஜன் தயாரிப்பு மட்டுமே செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், காப்பர் தயாரிப்பு ஆலைகள் செயல்படக்கூடாது.
மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இடம்பெற வேண்டும். அவர்களில் இருவரை, உள்ளூர் மக்கள் தேர்ந்தெடுக்கலாம். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான பெயர் பரிந்துரையை அவர்கள் வழங்கவில்லை என்றால், அதனையும் தமிழக அரசு மேற்கொள்ளலாம். இறுதியாக தமிழக அரசு வழங்க கூடிய பெயர் பட்டியலை பரிசீலித்து வெளியிட வேண்டியது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் பணி.
ஆலை அமைந்திருக்கும் மாவட்டமான தூத்துக்குடியின் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, மாவட்ட பொறியாளர், இந்த விஷயத்தில் தெளிவு கொண்ட 2 அரசு அதிகாரிகள் ஆகியோரை கொண்ட மேற்பார்வை குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த மேற்பார்வை குழு உள்ளூர் மக்களிடம் இருந்து அவர்களது பிரச்னைகளை கேட்டுப் பெற்று தீர்வுகளை சொல்வதற்கும் கண்காணிப்பு குழுவிற்கு உரிய தகவல்களை அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்" என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
வரும் நாள்களில், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, அதை சமாளிக்க வேதாந்தா நிறுவனம் தயாரிக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றால், தமிழக அரசு நேரடியாக நிறுவனத்தை நாடாமல், உயர் நீதிமன்றத்தையோ அல்லது தங்களையோ நாடலாம் என நீதிபதிகள் கூறினர்.
இறுதியாக, `உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வேதாந்தா நிறுவனத்தின் வேறு எந்த ஓர் ஆதாயத்திற்காகவும் உபயோகிக்கக் கூடாது. முழுக்க முழுக்க மருத்துவ அவசர நிலையை சமாளிக்க, இடைக்கால உத்தரவாகவே இந்த ஆலை திறப்பு இருக்கும்' என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் உறுதிபடக் கூறியுள்ளனர்.
- நிரஞ்சன் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்