கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி திட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்தையும் உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.
நாடுமுழுவதும் உள்ள தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்துவருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் நீதிமன்றம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில் உருமாறிய கொரோனாவை அறிவியல்பூர்வமாக கண்டறிவதில் என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர்? கொரோனா கட்டுக்குள் கொண்டுவர உள்ள செயல்திட்டங்கள் என்னென்ன? மத்திய மாநில அரசுகள் எந்தளவு ஒத்துழைப்புடன் செயல்படுகிறது? என்பதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள்து.
மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பேசியபோது, நாடுமுழுவதும் மக்கள் ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு குறித்து உதவிகேட்டு சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. தடுப்பூசி குறித்து பேசியபோது, ”ஏழைமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் விதமாக தேசிய அளவிலான பொதுத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில், அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்தால் சமநிலைத்தன்மை இருக்காது. எனவே தடுப்பூசி விலை நிர்ணயங்களை மத்திய அரசே மேற்கொள்ளவேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்