தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தமிழக கட்சிகளின் முடிவு ஒருதலைப்பட்சமானது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் பேட்டியளித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி பண்டாரம்பட்டி கிராம மக்கள் நேற்று மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் போராட்டம் செய்த மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கு உறுதி அளிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்று பண்டாரம்பட்டி மற்றும் அதன் அருகே உள்ள சுற்று வட்டார கிராமங்களான மீளவிட்டான், பாரதி நகர், வி.எம்.எஸ்.நகர், பனிமய நகர், குரும்பூர், முத்தையாபுரம், சில்வர் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்தத்தை நடத்தினர்.
இதன்பின்னர் வழக்கறிஞர் ஹரிராகவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை புறவாசல் வழியாக உள்ளே நுழைய முயற்சிக்கிறது. நோய் பரவலை பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளும் ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளான நாம்தமிழர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மையம், எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஒருதலைபட்சமாக முடிவெடுத்து அதை நீதிமன்றத்திற்கு அறிக்கையாக அளித்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்து மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவெடுக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் கடந்த 26ஆம் தேதி வாதத்தை எடுத்துவைத்தார். அதில் ஸ்டெர்லைட் ஆலையில் 35 டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அதையும் சரியான முறையில் தயாரிப்பதற்கு ஒன்பது மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மருத்துவ ரீதியாக பயன்படுத்த முடியாது அதை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். தமிழக அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்த இந்த வாதத்தை ஏன் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இனி அமையப் போகின்ற அரசாங்கமும் மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது.
மக்களின் நோக்கத்தின்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைய தினம் தூத்துக்குடியில் கருப்பு நாளாக அனுசரிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து நாளை வீடுகள் முன்பு கோலமிட வேண்டும்.
வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக் கொடி கட்ட வேண்டும். வேலைக்கு செல்வோர் யாராக இருந்தாலும் நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்ல வேண்டும் எனவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 3 மணி நேரம் மட்டும் தங்களது சுயவிவர படத்திற்கு பதிலாக கருப்பு நிறத்தினை சுயவிவர படமாக வைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறோம். இந்த போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடிக்குள் நுழைய முயல்கிறது. இது தூத்துக்குடி மக்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகின்றது. இந்த விஷயத்தில் தமிழக அரசும், மக்களும் இழப்பை சந்தித்து இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜனை கூட நம்மால் பெற முடியாத சூழல் உள்ளது. அதற்கு அவர்கள் கூறிய காரணமும் நம்மை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.
அங்கு தயாரிக்கக்கூடிய ஆக்சிஜனை கையாளும் அளவிற்கு தமிழகத்தில் திறன் இல்லை என்றும், அறிவுஜீவிகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். இது நம்மை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி கொடுத்த விஷயத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏனைய பிற கட்சிகளாக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
மக்களின் விருப்பத்தை நீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்க முதுகெலும்பில்லாத கட்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுவதற்கு முன்னர் அதை தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இழைத்த குற்றங்கள், பசுமை விதிமீறல், சுற்றுச்சூழல் சீர்கேடு, நச்சு வாயு வெளியேற்றம் உள்ளிட்ட பலவற்றுக்கும் குற்றவியல் நடவடிக்கை நீதிமன்றத்தின் மூலமாக எடுக்கப்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுவதற்கு முன் தடுத்து நிறுத்தலாம்.
ஸ்டெர்லைட் விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தூத்துக்குடி மக்கள் எதிரானவர்கள் அல்ல. ஏற்கெனவே மக்களின் மனங்கள் நொந்துபோய் உள்ளது. இதை சரிசெய்ய அரசுகள் முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை சரியான இடத்தில் நிற்க வைப்போம். நிற்க வைப்பதற்கான முயற்சிகள் எடுப்போம். அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்