முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் எஸ்.பி.க்கு, டி.ஜி.பி. அந்தஸ்திலான உயரதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. இன்று நேரில் ஆஜராகி, ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணம் முடிந்த கையோடு, பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், அவர் பங்கேற்றார். அப்போது, டி.ஜி.பி. அந்தஸ்திலான உயரதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.
அப்போது உயரதிகாரி பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுபற்றி காவல்துறை தலைவர், உள்துறை செயலாளரிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், வெங்கடேஷ் ஆகியோர் இவ்வழக்கை விசாரிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.முத்தரசி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. நீதிபதி பூர்ணிமா முன்னிலையில், நேரில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
விசாரணைக்கு ஆஜராகிய பெண் எஸ்.பி.யிடம், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, தனி அறையில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உயரதிகாரி மற்றும் புகார் அளிக்க சென்றபோது தடுத்து நிறுத்திய எஸ்.பி. ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த வழக்கு குறித்து, தமிழக அரசு அமைத்துள்ள விசாகா கமிட்டியும் பெண் எஸ்.பி.யின் புகார் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்