இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மருத்துவர்கள் உதவியுடன் முப்படைகளும் பேரிடர் கால களப்பணியாற்ற இறங்கியுள்ளன. மிக முக்கியமாக, ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க தங்களால் ஆன உதவியை செய்யத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகுதியாக இருப்பதால் மருத்துமனைகளில் நோயாளிகள் அனுமதியும் அதிகரித்து வருகிறது. அதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் கன்டெய்னர்களை கொண்டு செல்லும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைவாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்க முடியும் என நம்பப்படுகிறது.
மேலும் ராணுவமும், கடற்படையும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளில் பிரத்யேகமாக கொரோனா வார்டுகளாக மாற்றியுள்ளன. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ராணுவ மருத்துவர்களும், செவிலியர்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
முப்படையில் ராணுவத்தினர் மட்டும் 99 சதவிதம் பேர் முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 82 சதவிதம் பேர் 2ஆம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டதால் இப்போது களப் பணியில் இறங்கியுள்ளனர்.
இதனிடையே, இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965-லிருந்து 1,62,63,695ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,84,657லிருந்து 1,86,920ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 1,93,279 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்