மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மூச்சுத் திணறி வரும் நிலையில், அந்த மாநிலத்தில் தினசரி தேவை, தற்போது கிடைக்கக் கூடிய ஆக்சிஜன் அளவு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சற்றே விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
கொரோனாவின் கோரத்தாண்டவம் இரண்டாவது அலையில் மிக மோசமானதாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் அலை ஏற்பட்டபோது கொரோனா என்பது உலகத்திற்கே புதிதான ஒன்று என்பதால், இந்தியாவும் பெரும் பிரச்னைகளை சந்தித்தது. ஆனால், தற்போது இரண்டாவது அலையின்போது அத்தகைய பேரழிவுகளைத் தடுப்பதற்குரிய முறையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தன. எனினும், அத்தகைய வசதிகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தலைநகரிலேயே இப்போது இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
நிதி ஆயோக் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, தற்போது இந்தியாவில் தினமும் 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன், மாநில அரசுகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லிக்கு 378 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன், மத்திய அரசு தொகுப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் பாதிக்கப்படுவதால், இந்த தேவை இரட்டிப்பு மடங்கு ஆகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் டெல்லி மாநில துணை முதல்வர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுவதாக கூறியிருந்தார். மேலும், மத்திய அரசு வழங்கும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பது போக டெல்லிக்கு 480 மெட்ரிக் டன், அதாவது முன்பு வழங்கப்பட்டதிலிருந்து சுமார் 100 மெட்ரிக் டன்கள் மட்டுமே மத்திய அரசால் உயர்த்தி வழங்கப்பட்டது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அந்த மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்பதே காரணம்.
எனினும், முன்கூட்டியே இந்த பேரழிவிற்கு முழுமையாக மத்திய, மாநில அரசுகள் தயாராகாததன் காரணமாகவே உடனடியாக இந்த ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதில் தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே தற்போது மிகப் பெரும் துயரத்தை டெல்லி அரசாங்கம் சந்தித்து வருவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதனால்தான் 'பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள்... ஆனால், மக்களை காப்பாற்ற உடனடியாக ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்' என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது.
இதன் காரணமாகத்தான் நேற்றைய தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ தேவைகளுக்கு திருப்பி விடவும் அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், டெல்லியின் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மிகப் பெரிய ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் தலைநகர் டெல்லிக்கு பெரிய அளவில் இல்லை என்பது மறுப்பதற்கு இல்லாத உண்மை.
எனவே, அண்டை மாநிலங்கள் வழியாகத்தான் தலைநகர் டெல்லிக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைத்தாக வேண்டும். ஆனால், ஏற்கனவே டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலானவற்றில் ஆக்சிஜன் அடுத்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சூழலில், பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களை கைவிடும் சூழல் நிலவுகிறது. இதனால்தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பலி எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கிறது.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன்களை டெல்லிக்கு கேட்டுப் பெற டெல்லி அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல சிறிய அளவிலான ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை உடனடியாக உருவாக்கவும் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு, இவை எப்போது சென்று சேரும் என்பதுதான் இப்போதும் எழும் மிகப் பெரிய கேள்வி.
- நிரஞ்சன் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்