ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆக்ஸிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் நேற்றே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இன்றையதினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர், எக்காரணத்தைக்கொண்டும் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று கூறினார். மேலும், அது கடுமையான சுற்றுசூழல் மாசுபாட்டையும், விதிமுறை மீறல்களையும் மேற்கொண்டதால் தமிழக அரசு கொள்கைமுடிவாக அந்த ஆலையைத் திறக்கக்கூடாது என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ஆக்ஸிஜன் உற்பத்திக்குத் தேவையென்றால் தமிழக அரசே நேரடியாக ஆலையை எடுத்து நடத்தலாம் என்று கூறினார். அதற்கும் மறுப்புத் தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர், தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுடன் கருத்துக்கேட்கும் கூட்டம் நடத்திவருவதாகவும், அதில் பெரும்பாலானோர் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்துவருவதாகவும் கூறினார். மேலும் மக்களின் கருத்து மிகவும் முக்கியம் என்பதால் கூட்டம் முடிவுக்குப்பிறகான தகவல்களை ஒன்றுதிரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதில் நாட்டின் மற்ற பகுதியிலுள்ள ஆலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆலோசனையாகக் கூறியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்