கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்