சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், விஜய் நடித்த 'சர்கார்' பாணியில் வாக்களித்திருக்கிறார். எனினும், டெண்டர் முறையிலான வாக்களிப்பு என்பது தனக்கு வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.
சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 8:30 மணிக்கு வாக்கு செலுத்த சென்றுள்ளார். ஆனால், அவரின் வாக்கை ஏற்கெனவே ஒருவர் பதிவு செய்து விட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், "நான் வாக்களிக்க வேண்டும்" என்று கிருஷ்ணன் கூறியுள்ளார். இதை அடுத்து ஆலோசனை செய்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனர். அதன்படி கிருஷ்ணன் வாக்களித்து வந்துள்ளார்.
"இத்தனை வருட (70 வயது) அனுபவத்தில் இதுவே முதல்முறை. என்னுடைய ஓட்டை வேறொருவர் பதிவு செய்தது வருத்தமாக உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு இடையில் சிறிய அளவு வித்தியாசம் வரும் பட்சத்தில் மட்டுமே என்னுடைய வாக்கை எண்ணுவார்கள் என்று அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். இல்லை என்றால் என்னுடைய வாக்கை எண்ண மாட்டார்களாம். எனவே, இது தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்றார் கிருஷ்ணன்.
- செந்தில்ராஜா.இரா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்