தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொரோனாவின் கடுமையான பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இதற்காக, தினமும் 22 நிமிடங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்தாலே போதுமானது என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. தற்போது ஒருநாள் பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 2 லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு தற்போது 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் பலவற்றிலும் கோரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்' வெளியிட்டுள்ள ஓர் ஆய்வின் முடிவுகள், கொரோனா தொடர்பான சில முக்கிய தகவல்களை எடுத்து சொல்லியிருக்கிறது. அமெரிக்க சுகாதாரத் துறை மற்றும் மனித சேவைகள் துறை வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, கொரோனா பாதித்த 50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்டதில், அவர்களின் உடல் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின்படி, "வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்படுவது, மற்றும் கொரோனா காரணமாக தீவிர உடல்நலமின்மை போன்றவற்றில் இருந்து தப்பிக்கின்றனர். இருதய நோய், உடல் பருமன், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளுள் ஒன்றாகவே கடுமையான கொரோனா இருக்கிறது. ஆனால் உடற்பயிற்சி, கொரோனா அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.
இந்த 50,000 பேரிடம் நடத்திய ஆய்வில், தொற்று ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாதவர்கள், தொற்று ஏற்பட்ட பின் ஐசியு-வில் சேர்க்கப்படும் அளவுக்கு தீவிர உடல்நலக்குறைவை சந்திக்கின்றனர். வயது முதிர்வு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அடுத்தபடியாக உடற்பயிற்சி வாடையே இல்லாதவர்கள்தான் கொரோனா காரணமாக உயிரிழப்பை சந்திக்கும் நிலைக்கு செல்கிறார்கள்" என்று விரிவாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 150 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது உகந்தது எனும் நிலையில், தினமும் 22 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதற்காக நேரத்தை ஒதுக்குவது நன்மை பயக்கும். இதற்காக, ஜிம் - உடற்பயிற்சி மையங்களில் சேர்ந்துதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, நிபுணர்களின் உரிய வழிகாட்டுதலுடன் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதும் போதுமானது என்று அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்