கொரோனாவிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு, தடுப்பூசியே நம்முன் இருக்கும் ஒரே வழி. இச்சூழலில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை தொடர்ந்து இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு வருகிறது. இம்மூன்று தடுப்பு மருந்துகளுக்கு இடையேயான பொதுவான வேறுபாடுகளை காணலாம்...
கோவிஷீல்டு: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.
கோவாக்சின்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள தடுப்பூசி இதுவாகும்.
ஸ்புட்னிக் வி: ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்படுத்த இந்தியாவைச் சேர்ந்த சேர்ந்த டாக்டர் ரெட்டி ஆய்வகம் அனுமதி வாங்கியுள்ளது.
- செயல்திறனை (Efficacy) பொறுத்தவரையில் கோவிஷீல்டு 70 முதல் 90 சதவீதம் வரை செயல்திறன் கொண்டது. கோவாக்சின் 81% செயல்திறன் வாய்ந்தது. ஸ்புட்னிக்-வி 91.6% அளவுக்கு செயல்திறன் கொண்டது.
- டோஸ் இடைவெளி: கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைப் போன்றே ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இரண்டு டோஸ்கள் கொண்டது. இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்தவரையில் கோவாக்சினுக்கு 28 நாட்கள், கோவிஷீல்டுக்கு 60 முதல் 90 நாட்கள், ஸ்புட்னிக்-வி 21 நாட்கள் என்கிற இடைவெளியில் செலுத்திக்கொள்ள வேண்டும்.
- கோவிஷீல்டு என்பது சிம்பன்சி இனத்தில் (வாலில்லா குரங்கு) சாதாரண சளி, இருமலை உருவாக்கும் அடினோ வைரஸை வாகனமாகப் பயன்படுத்தி, அதில் கொரோனா வைரஸின் கூர்புரத மரபணுக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டது.
- கோவாக்சின் செயலிழக்க செய்யப்பட்ட கொரோனா வைரஸில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தும் போது, உடலுக்குள் நுழையும் ஆபத்தான உயிர்க்கொல்லி வைரஸுக்கு எதிரான எதிரணுக்களை உருவாக்கி, அவற்றின் வீரியமிக்க புரதத்தை அழிக்கும்.
- ஸ்புட்னிக்-வி, அடினோ வைரஸின் மாற்றி அமைக்கப்பட்ட மரபணுவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஆகும். முதல் டோஸில் ஒரு வைரஸும், இரண்டாவது டோஸில் வேறொரு வைரஸும் செலுத்தப்படுகிறது. இதனால் நீடித்த நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது.
- தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பொறுத்தவரையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளுக்கு ஒரேமாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குமட்டல், லேசான காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், ஒவ்வாமை, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் தடிப்பு போன்றவை வெளிப்படலாம். ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்துக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விலை நிலவரம்: அரசின் தலையிடு காரணமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இலவசமாக அல்லது 250 ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஆனால் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரிப்புத் துறையை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பொறுத்தவரையில், வெளிநாடுகளில் இந்திய மதிப்பில் ஒரு டோஸ் ரூ.750-க்கு செலுத்தப்படுகிறது. இந்தியாவில் இன்னும் இதன் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்