சென்னையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 21 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைந்துள்ளது.
தமிழகத்திலேயே கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் இருந்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 21.5 சதவிகிதம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மே 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6 சதவிகிதம் வரை குறைந்து 15.3 சதவிகிதமாக சரிந்துள்ளது.
சராசரியாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. தவிர ஒட்டுமொத்த தமிழகத்திலும் 84 நாட்களுக்குப் பின் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் முதல் முறையாக குறைந்துள்ளது. எனினும், தமிழகத்தில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை அன்று தான் அதிக அளவில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,775 ஆக அதிகரித்திருப்பதால், உயிரிழப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லிக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் தமிழகம் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்