மதுரை முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை வின்சென்ட் நகர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான (அன்னை தெரசா) முதியோர் இல்லத்தில் மொத்தமாக 110 பேர் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த முகாமில் தங்கியுள்ள சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்ததால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 21 முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை முதியவர்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்லவோ தனிமைப்படுத்தவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் 60 வயதை கடந்தவர்கள் என்பதால் அதிகமானோர் இணை நோய்களால் பாதித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து தொற்று உறுதியானதை அறியாமல் மற்றவர்களுடன் பழகிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் தொற்றின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலை முதியவர்களை அதிக அளவில் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்ற சூழலை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்