பெருந்தொற்று பரவும் இந்தப் பேரிடர் காலத்தில், நெல்லை மாநகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவளிக்கின்றனர் சில இளைஞர்கள். அவர்களை பற்றி இங்கு பார்ப்போம்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கருணையின்றி பல உயிர்களையும் பறித்துக் கொண்டது இந்த பெருந்தொற்று. தொற்று பயம் காரணமாக ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் தயக்கம் காட்டும் இந்த நேரத்தில், கருணை உள்ளத்துடன் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர், நெல்லை மாநகரை சேர்ந்த 25 முன்மாதிரி இளைஞர்கள்.
நெல்லை மாநகரில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கும், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தொழில் ரீதியாக வந்து தங்கி இருக்கும் வடமாவட்ட தொழிலாளர்களுக்கும் நாள்தோறும் 25 இளைஞர்கள் ஒன்றிணைந்து உணவு தயாரித்து வழங்குகின்றனர்.
சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பாயாசம் என விருந்து படைப்பது போன்று உணவளித்துவருகின்றனர். இதற்கான பொருட்செலவுக்கு, 25 நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பொருளுதவி செய்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வெளியிலிருந்து யாராவது பண உதவி செய்ய நினைத்தால் அதை அவர்கள் பெறுவதில்லை. அதற்கு பதிலாக பொருள் உதவியாக அரிசி, பருப்பு, மளிகை போன்ற பொருட்களை தருமாறு கேட்கின்றனர். இதுவரை தடையின்றி செல்வதாகவும் ஊரடங்கு காலத்தில் இது தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
யாரும் பசியோடு இருத்தல் கூடாது என்பதே நோக்கம் என்ற அடிப்படையில் இதை செய்வதாக இந்த முன்மாதிரி இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
- நாகராஜன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்