கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஞாயிறன்று மீண்டும் ஆய்வு செய்கிறார். அங்கு தினசரி பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக தொடர்ந்து சென்னை இருந்து வந்த நிலையில், அதனை முந்தியுள்ளது கோவை. சென்னையின் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவையில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கோவையின் தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 5 மடங்கு நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. கோவையில், ஏப்ரல் மாத இறுதியில் 6 ஆயிரத்து 948 பேர் சிகிச்சையில் இருந்தனர். இப்போது 37 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் நோய்ப் பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அதன்பிறகும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் மூன்று மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் ஞாயிறன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார். தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிகிறார்.
கோவை மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சூலூர், துடியலூர், மதுக்கரை, தொண்டாமுத்தூர், அன்னூர் போன்ற புறநகர்ப் பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. அப்பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. வேலைக்கு செல்பவர்கள் மூலம் பரவல் ஏற்படுகிறது என்று சொல்லப்படும் அதே நேரத்தில், பொதுமக்களிடம் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே தொற்று அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. எனவே, அரசு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்