காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 622 நபர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்தி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய் பரவலை தடுக்க நகராட்சி பேரூராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 622 ஆக பதிவாகியுள்ளது. இது, அந்தந்த மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 374 நபர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 288 நபர்களும் அடங்குவர்.
இதில், தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு, உரிய மருந்துகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும், பலர் இறந்து வருகின்றனர. உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இருக்கும் சுடுகாடுகள் அவற்றின் அடிப்படை வசதிகள் விபரம் குறித்து தனி அலுவலர்கள் என அழைக்கப்படும் பி.டி.ஓ.க்கள் மூலமாக கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி செயலர்கள் துவக்கி உள்ளனர்.
சுடுகாடு எரிமேடை, குடிநீர் கைபம்பு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பலவித அடிப்படை வசதிகளை கணக்கெடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் இதுபோன்ற கணக்கெடுப்பு, கிராம மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்