Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதல்வர் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளும் சாத்தியக்கூறுகளும் - ஒரு பார்வை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற பெயரில் 7 தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வரும் 7-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினின் 7 தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சாத்தியங்கள் என்ன? சவால்கள் என்ன? 

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கூறுகையில், "குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது சாத்தியமான திட்டமே. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம், குறைந்த விலையில் ரேஷனில் அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தபோது இந்தத் திட்டங்களை எப்படி செயல்படுத்தப் போகிறது தமிழ்நாடு எனப் பல்வேறு சந்தேகம் கிளம்பின. ஆனால், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி காட்டியபோது, பிற மாநிலங்களும் தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு இந்த திட்டங்களை கையிலெடுத்து அறிமுகப்படுத்தின.

ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி வழங்கும் திட்டத்தை 25 ஆண்டு காத்திருப்புக்கு பின்தான் செய்ய முடிந்தது. எனவே, தொலைநோக்கு திட்டங்களை குறித்து கனவு காண்பதில் எந்த தவறும் கிடையாது. கனவை கண்டால்தான், அதைநோக்கி பயணிக்க முடியும்’’ என்கிறார் அவர்.

பாஜகவை சேர்ந்த கனக சபாபதி கூறுகையில், "மு.க.ஸ்டாலினின் 7 தொலைநோக்கு திட்டங்கள் அவசியமான ஒன்று. இது சாத்தியமான திட்டங்களும் கூட. ஆனால், இதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் டாஸ்மாக் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது தொலைநோக்கு திட்டத்திற்கு நல்லதல்ல. வெளிப்படைத்தன்மையாக ஆட்சி நிர்வாகத்தை நடத்தி ஊழலை ஒழித்துவிட்டாலே தொலைநோக்கு திட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. வேலைவாய்ப்பு, நகர்ப்புற வளர்ச்சி, நீர்வளம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. திமுக மாற்றுக்கட்சியாக இருந்தாலும் கூட மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றினால் நல்ல பலன் கிடைக்கும். சிறுகுறு தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி மாநிலங்களை 'இது பாஜக அரசு', 'இது மாற்றுக் கட்சி அரசு' எனப் பிரித்து பார்ப்பதில்லை. அவர் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியைதான் பார்க்கிறார். எனவே, திமுக அரசு செயல்படுத்துகிற மாநில வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்" என்கிறார். 

image

ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்னென்ன?   

1. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டுவதே முதல் இலக்கு. இதை சாதித்துவிட்டால் நமது பொருளாதாரம் ரூ.38 லட்சம் கோடியை தாண்டும். தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் உயரும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். இப்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாக குறைப்போம். கடும் வறுமையில் வாடும் 1 கோடி மக்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மீட்கப்போகிறோம். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.  

2. தமிழகத்தில் நிகர பயிரீடு பரப்பு 60 சதவீதம் ஆகும். கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிட செய்து, இதை 75 சதவீதமாக உயர்த்தும் இலக்கை 10 ஆண்டுக்குள் எட்டவுள்ளோம். தமிழகத்தில் தற்போது 10 லட்சம் ஹெக்டேர் இருபோக நிலங்கள் உள்ளன. இதனை அடுத்த 10 ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவுள்ளோம். உணவுதானியங்கள், பணப்பயிர்களின் வேளாண் ஆக்கத்திறனில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெற செய்வோம்.

 3. தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்தி வழங்க உறுதி பூண்டுள்ளோம். நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவை 50-ல் இருந்து 15 சதவீதமாக குறைக்கவுள்ளோம். மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5-ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தவுள்ளோம். பசுமை பரப்பளவை 20.27 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை கூடுதலாக இணைக்கவுள்ளோம்.

 4.  கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் நிதி அளவை 3 மடங்கு உயர்த்த இருக்கிறோம். கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெற செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். பள்ளிக்கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளிகளும், மருத்துவமனைகளும் அமைக்கப்படும். டாக்டர்கள், செவிலியர்கள், துணை டாக்டர்கள் மற்றும் பிற தொழிற்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

 5. கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவை 35 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும். அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும். புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவை 16.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கும் கீழாக குறைக்கப்படும். நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்கள் இடம்பெறச் செய்யப்படும்.

6. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் இப்போது 57 சதவீதம் கான்கிரீட் வீடுகள் உள்ளன. 20 லட்சம் கான்கிரீட் வீடுகளை புதிதாக கட்டித்தந்து, இதனை 85 சதவீதத்துக்கு உயர்த்தப்படும். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளும், வடிகால் அமைப்புகளும் கட்டமைக்கப்படும். எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதி ஏற்படுத்தப்படும். குறைந்தபட்சம் 50 சதவீதம் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச செயலுற செய்வோம்.

 7.  குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும். மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்