தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன.
இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான் என்றாலும் குணப்படுத்தப்படக்கூடிய நோய் என்கின்றனர் மருத்துவர்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், ஐசியூவில் பல நாட்களாக இருக்கக்கூடியவர்கள் இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அம்மாநில அரசு 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' இந்த பாதிப்பை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்ளிட்ட 9 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். சிகிச்சை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதனால் இதுவரை உயிரிழப்பு இல்லை. சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்