Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: மு.க.ஸ்டாலின் ஆய்வு | இஸ்ரேல் திட்டவட்டம் | ஓசூர் சோகம்

சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கை வசதிகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.

  • கொரோனா இன்று: இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 3,874 பேர் உயிரிழந்துள்ளனர். 
  • தமிழக அரசு ஏற்பாடு: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தொற்றால் பெற்றோர் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளை தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் மாவட்டந்தோறும் பணிக்குழுக்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. 
  • புதிய அமைச்சரவை: கேரள முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார் பினராயி விஜயன். புதிய சுகாதாரத்துறை அமைச்சராகிறார் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ்.  
  • வீட்டிலேயே கொரோனா பரிசோதனை: கொரோனா இருப்பதை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற சாதனத்தை மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தொற்று அறிகுறிகள் உள்ளோரும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரும் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. இக்கருவி மூலம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் என்றும் அறிகுறிகள் இருந்து இக்கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த சோதனையை மேற்கொள்ள வசதியாக மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
  • பேரறிவாளன்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சென்னையை அடுத்துள்ள புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் விடுப்பு வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட உத்தரவிட்டுள்ளார். 
  • மீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை மறுநாள் முதல் தமிழ்நாடு கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது
  • 'பிக்பாஸ்' அரங்கிற்கு சீல்: சென்னையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு அரங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் திட்டவட்டம்: இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 10 நாட்களாக நீடித்துவரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கு காரணமான தாக்குதலை நிறுத்துமாறு பைடன் கேட்டுக்கொண்டார். சண்டை நிறுத்தத்திற்கான பாதையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் நெதன்யாகுவிடம் பைடன் கூறினார். இதனை நிராகரித்துள்ள பெஞ்ஜமின் நெதன்யாகு, தங்களது நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதலைத் தொடர்வது என்பதில் உறுதியாக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். 
  • இருவர் கைது: சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் போட்டி காரணமாக உணவக உரிமையாளரை தாக்கிய மற்றொரு உணவக உரிமையாளர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதல் நிகழ்வின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளும் தற்போது வெளியாகி உள்ளன. 
  • ஊராட்சியில் பதவிபெற லட்சக்கணக்கில் பணமா? கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவைச் சேர்ந்த கமலா வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். அப்போது வார்டுகளில் வென்றவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், வினோத்குமார் என்பவர் தேர்வானார். தற்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், வினோத்குமாரை தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்கள், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தினர். துணைத்தலைவர் பதவியை பயன்படுத்தி வினோத் குமார் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதுபோன்ற சூழலில், வினோத்குமாரை தேர்வு செய்த வார்டு உறுப்பினர்கள் பலருக்கு அவர் கட்டுக்கட்டாக பணம் கொடுப்பதாகக் கூறப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
  • ட்ரெய்லரால் சர்ச்சை: ஜூன் 4ஆம் தேதி 'தி ஃபேமிலி மேன்' தொடரின் 2ஆவது பகுதி வெளியாக உள்ளது. அதற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில காட்சிகள் சென்னையில் நடப்பது போல் உள்ளன. அதில் இலங்கை தமிழ் போராளியை போன்று சித்தரிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, 'நான் எல்லாரையும் சாக கொல்லுவேன்.' என்று பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இலங்கை வரைபடமும் தமிழ் போராளிக்குழுக்கள் சீருடையில் பயிற்சி பெறும் காட்சிகளும் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. மேலும், இலங்கை தமிழ் போராளிகளை கலகக் குழுக்கள் எனவும் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை DISLIKE செய்யும்படியும் பலர் கோரி வருகின்றனர்.
  • விவசாயிகள் கோரிக்கை: தஞ்சை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள் முற்றிலும் சேதமாகின. ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • காவலர்கள் சஸ்பெண்ட்: சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்று கைதானவர்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்ச ரூபாயை அபகரித்த குற்றச்சாட்டில், காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
  • மறுப்பு அறிவிப்பு: இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலைட் சயின்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 2-DG என்ற மருந்து டெல்லியில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலக்கூறுகள் கொரோனா வைரஸூக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டது. இந்த மருந்து விற்பனைக்கு வந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம், இந்த மருந்தை இதுவரை விற்பனைக்கு கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ளது. 2-DG மருந்து, அடுத்த மாத மத்தியில் தான் விற்பனைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது. ஆகவே, 2-DG மருந்தை யாரும் விற்பனை செய்வதாகச் சொன்னால், அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலைட் சயின்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • முட்டை விலை உயர்வு: நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு 4ரூபாய் 70 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் முட்டையின் விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரிப்பே இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • யானை மீட்பு: கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் குழிக்குள் விழுந்த குட்டி யானை ஒன்று புல்டோசர் இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. அண்மையில் பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு குழிக்குள் யானை விழுந்தது. இதைக்கண்ட மக்கள் புல்டோசரை வரழைத்து யானையை பத்திரமாக மீட்டனர். எனினும் மீட்கப்பட்ட குட்டி யானை புல்டோசர் ஓட்டிய வனத்துறை ஊழியருடன் சண்டைக்கு வந்தது. அப்போது சிலர் பட்டாசுகளை வெடித்து தூக்கி எறிந்ததால் யானை பின்னோக்கி சென்று தப்பி ஓடியது.
  • சீன விஞ்ஞானிகள் மகிழ்ச்சி: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம் கடந்த வாரம் அக்கோளின் தரையில் வெற்றிகரமாக இறங்கியது. இதையடுத்து விண்கலத்திலிருந்து வெளியான ரோவர் செவ்வாயில் தென்பட்ட காட்சிகளை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. அடுத்து செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் உள்ள பாறைத் துகள்களை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளது.
  • 18+ தடுப்பூசி: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதத்திற்குள் 51 கோடி தடுப்பூசிகளும் ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் மேலும் 216 கோடி தடுப்பூசிகளும் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறியுள்ள அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இதைக்கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • ஓசூர் சோகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சகோதரிகளான ஜீவா, வசந்தா மற்றும் கலா ஆகிய மூன்று பேரும் அடுத்தடுத்த வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தாவின் மகன் லோகேஷ் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். அப்போது, வசந்தாவும், அவரது சகோதரிகளும் அடிக்கடி லோகேஷை பார்த்து நலம் விசாரித்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று பரவியது. உடனே நான்கு பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்தா, கலா, ஜீவா ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். லோகேஷ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலாவின் மகன் பாபுவும் நேற்று இறந்தார்.  சகோதரிகள் மூன்று பேர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஓசூர் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அத்துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்காக, ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் ஆகியோர்களை உள்ளடக்கி ஒருங்கிணைப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலர்களை நியமித்துக் கொள்ளலாம். ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ளவர்களின் விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அந்தந்த அலுவலர்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்