இடிந்த வீட்டில் வாழ்ந்து வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட தாயுடன் பலமுறை மனு அளித்தும் உதவிக்கரம் நீட்டவில்லை என்றும், அரசு உடனே உதவிசெய்ய வேண்டியும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் குமளத்தை அடுத்த வி.மாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ். 33 வயதான ராஜேஷ் கடந்த 2004ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் அதிகரித்து, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இரண்டு கண்பார்வையும் இழந்தார் ராஜேஷ்.
தற்போது 10% மட்டுமே பார்க்கும் திறன் கொண்டவராக மாறிப்போனார் ராஜேஷ். தன்னை பார்த்துக் கொள்வதற்கு தன் தாயைத் தவிர வேறு யாரும் இல்லை என்கிறார். கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜேஷின் தாய் விசாலாட்சி கடந்த சில ஆண்டுகளாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெய்த மழை, இடி, மின்னல், புயல் காரணமாக ராஜேஷ் தங்கியிருந்த வீடு முற்றிலுமாக இடிந்து சேதம் ஆகிவிட்டது.
இதற்கு முன்னர் அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் வாழ்ந்து வந்த ராஜேஷ் அந்த வீடு முழுதும் சேதமடைந்ததால், தனியாக கூரை வீட்டினை கட்டினார். அந்த கூரைவீடும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெய்த மழையில் முற்றிலுமாக இடிந்து சேதம் ஆனதால், தற்போது சிறியதாக ஒரு கொட்டகை அமைத்து அதில் இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய நிலை கருதி மாவட்ட நிர்வாகத்திற்கும், வட்டாட்சியருக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்கிறார் ராஜேஷ். தன்னுடைய நிலையறிந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் தன்னை சந்தித்து தனக்கு சில நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போது அரசு தனக்கு ஒரு வீடு கட்டி தரவேண்டும் என்றும், தனக்கு தகுந்தாற்போல ஒப்பந்த அடிப்படையிலாவது ஒருவேலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதும் ராஜேஷின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மாற்று திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நியாயவிலைக்கடை அரிசிக்கான விண்ணப்பம் செய்திருப்பதாகவும், அதற்கும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் ராஜேஷ். எனவே அரசு தனக்கு ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்து வருகிறது .
இதுதொடர்பாக விக்கிரவாண்டி வட்டாட்சியரை பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. தன்னுடைய தாய் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வேலை செய்ய முடியாததால், தனக்கு வரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில் தான் நாங்கள் இருவரும் குடும்பம் நடத்துவதாக கண்ணீருடன் தெரிவிக்கிறார் மாற்றுத்திறனாளி ராஜேஷ். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்