தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில், 70 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. ஆனால், 400 மெட்ரிக் டன் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கூடுதலாக ஆக்சிஜன் வழங்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் வேண்டுகோள்: ஆக்சிஜன், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தொழில் நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்கும் அரசின் முயற்சிக்கு பங்களிப்பை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான எழுத்தாளர் கி.ரா. தனது 99வது வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவலில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற்றது. தமிழகத்தில் எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை செய்வது இதுவே முதல்முறையாகும்.
ராமநாதபுரம் அதிர்ச்சி: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது, மற்ற நோயாளிகளையும் உறவினர்களையும் அச்சமடையச் செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 584 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூச்சுத்திணறல் காரணமாக நேற்று ஒரே நாளில் 22 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக, மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், கடைசி ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அரசு மருத்துவமனைக்கு வருவதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், சிறிய அளவில் அறிகுறிகள் தெரியும்போது தாங்களாகவே வெளியில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாமல் முன்கூட்டியே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தீவிர கண்காணிப்பு: சென்னையில் காவல்துறையினர் நேற்று திடீரென அமல்படுத்திய புதிய கட்டுப்பாட்டால் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். இன்றைக்கு வாகன சோதனையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். சென்னையில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-பதிவு செய்து அனுமதி பதிவு பெற்றிருக்க வேண்டும். இ- பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை நிலவரம்: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், அங்கு ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நீடிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. மொத்தமுள்ள 3,858 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3071 பேருக்கு கொரோனா பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்நிலையில் தற்போது மொத்தமாக 23 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கோவை மாவட்டத்தில் 905 பேர் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.
விஜயகாந்த் உடல்நிலை: சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள தேமுதிக, விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உருவாகிறது காற்றழுத்தப் பகுதி: வங்கக் கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் புயல் உருவாகினாலும் தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் பொதுமுடக்கம் நீட்டிப்பு: தெலங்கானாவில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், இம்மாதம் 30 ஆம் தேதி வரை அங்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தெலங்கானாவில் கடந்த 12 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்தி, அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து இம்மாதம் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மளிகை, காய்கறி மற்றும் மருந்துக் கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் மருத்துவமனைக்கு அபராதம்: போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டதால் மருத்துவர் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சிகிச்சை பெற்ற விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தடுப்பூசி நிலவரம்: தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. காலையில் 72 ஆயிரம் கோவாக்சின் வந்தநிலையில், தற்போது ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. தமிழகத்தில் நாளை 18 - 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நிலையில் கூடுதல் தடுப்பூசிகள் வந்துள்ளன.
'உ.பி.யில் 1,621 ஆசிரியர்கள் உயிரிழப்பு: உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 1,600க்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஆசியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 621 பேர் இறந்துவிட்டதாக உத்தரபிரதேச ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தினசரி பாதிப்பு: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். புதிதாக 2.67 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
தேர்தல் பத்திரங்கள் விற்பனை: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின்போது, 695 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும், 141 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.
ஸ்டாலின் நாளை ஆய்வு: கொரோனா தொற்று பரவல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கு மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சென்னைக்கு அடுத்ததாக மேற்கு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மேற்கு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
கேரள சர்ச்சை: கேரளா முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சைலாஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் அளிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், இதில் ஏமாற்றம் அடைய ஏதும் இல்லை என்றும், புதிய அமைச்சர் தன்னை விட சிறப்பாக செயல்படுவார் என்றும் தெரிவித்திருக்கிறார் ஷைலஜா.
வெறிச்சோடி காணப்படும் எல்லைப்பகுதி சாலைகள்: இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழக - கேரள எல்லையிலுள்ள நாடுகாணி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி வழியாக, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். தமிழகம் மற்றும் கேரளாவில் ஊரடங்கு அமலில் இருந்த போதும், பல்வேறு காரணங்களைக் கூறி வாகனங்கள் வந்து சென்றன. இந்நிலையில், நேற்று முதல் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டதால், இங்கு வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நின்றுபோனது. இதேபோல், கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் பிற சாலைகளும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
2000 லிட்டர் சாரய ஊறல் பறிமுதல்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கலில் ஈடுபட்ட சாமிநாதன் என்பவரை கைது செய்த காவல்துறையினர், வருவாய்த் துறையினர் முன்னிலையில் சாராய ஊறலை அழித்தனர். அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டும் 5,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் டிஎஸ்பி ராஜலிங்கம் என்பவர் உயிரிழப்பு: கரூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த டிஎஸ்பி ராஜலிங்கம் உயிரிழந்தார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விரல்ரேகை புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் ராஜலிங்கம். 45 வயதான இவர் கரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜலிங்கம் உயிரிழந்தார்.
மூவர் கைது: தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைதானவர்களில் கிஷோர் குமார் என்பவர், தான் வேலை பார்க்கும் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்தை எடுத்து வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்தை 23 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ததாக ராஜேந்திர பாபு என்பவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை நிலவரம்: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகும் நிலையில் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் ஆம்புலன்சில் பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சில்களில் நோயாளிகள் காத்திருந்த நிலையில், ஆம்புலன்சிலேயே ஆக்சிஜன் உதவியுடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்சிசன் உள்ள 2 பேருந்துகள் மருத்துவ கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் படுக்கைகள் காலியான பின்னர் நோயாளிகள் ஆக்சிஜன் பேருந்துகளில் இருந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஒரு வாரத்தைக் கடந்தும் நீடித்து வரும் மோதலில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் குண்டு வீச்சு காரணமாக காஸாவில் 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை வீச்சில் இஸ்ரேல் பகுதியில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனிடையே இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
காஸா மீதான தாக்குதலை நிறுத்த கோரிக்கை: காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்பட்ட பேரணியில் வலியுறுத்தப்பட்டது. அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படக்கூடாது என பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
அகதிகள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் நடவடிக்கை: மொரோக்கோவில் இருந்து அதிகளவிலான மக்கள் செயூட்டாவிற்குள் நுழைவதை தடுக்க நூற்றுக்கணக்கான காவலர்கள் கடற்கரையோரம் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாள்களில் எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் கடல் வழியாக செயூட்டாவிற்குள் நுழைந்த நிலையில், அவர்களில் பாதி பேர் மீண்டும் மொரோக்கோவிற்கே அனுப்பப்பட்டதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. கடற்கரையில் குவிந்தவர்களை கலைக்கும் பொருட்டு கண்ணீர்புகைக் குண்டுகளை ஸ்பெயின் காவலர்கள் உபயோகப்படுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்