Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழ்நாடு முதல்வராக இருந்தபொழுது, எனது தலைமையிலான தமிழக அரசு, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.

மேலும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையாளரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் ஆதரவோடு நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இக்காலகட்டத்தில் தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதார சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு விலையில்லா உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க நிவாரண நிதி போன்றவை வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.

தற்போது தினந்தோறும் 33 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைகிறார்கள். அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

எனவே, கடந்த ஆண்டு எனது தலைமையிலான தமிழக அரசு மேற்குறிப்பிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியது போல், உடனடியாக 2,000 ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்