கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் கணவர் உயிரிழந்துவிட்டதாக மனைவி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் உயிரிழந்தார். ராஜாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் குழாயை மருத்துவர் அகற்றியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணவர் உயிரிழந்ததாக ராஜாவின் மனைவி கதறி அழுதார். ஆபத்தான நிலையில் வந்த மற்றொரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ராஜாவுக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் குழாயை மருத்துவர் அகற்றியதாகவும், தான் எவ்வளவோ தடுத்தும் தன்னை தள்ளிவிட்டு மருத்துவர் ஆக்சிஜன் குழாயை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி ராஜாவின் மனைவி குற்றஞ்சாட்டுகிறார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர் ரமேஷிடம் கேட்டபோது, உணவு கொடுக்கும்போது நோயாளிகளுக்கு சிறிது நேரம் ஆக்சிஜன் குழாய் எடுக்கப்படும் என்றும், அந்த சமயத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் விளக்கம் அளித்தார். ஆனால், மருத்துவர் கொன்றுவிட்டதாக தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக மருத்துவர் ரமேஷ் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்