உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மாநிலத்தை ஆளும் அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்துள்ள சர்ச்சை விவாதமாக மாறி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் கொரோனா கால நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை வெளியில் சொல்லும் பத்திரிகையாளர்கள் போன்றார் யோகி அரசால் மிரட்டப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் அனுஜ் அவஸ்தி என்ற உள்ளூர் பத்திரிகையாளர். கன்விஸ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் இவர் சமீபத்தில் ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது மாவட்டத்திலிருந்து, மாநிலத்தின் ஒரு பெரிய நகரத்திற்கு திருப்பி விடப்படுவதாக எழுதியிருந்தார்.
இதை எழுதிய சில நாட்களுக்குப் பிறகு, வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கில் ஒரு சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தால் இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸால் கொதித்து போய் இருக்கும் அனுஜ், "ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை வசதிகள் மற்றும் இறப்புகள் போன்ற பிரச்னைகள் ஒருபோதும் தீர்க்கப்படவில்லை. ஆனால் அதனை சொல்லும் என்னையும் பிற பத்திரிகையாளர்களையும் அரசாங்கம் அச்சுறுத்த முயற்சிக்கிறது" என்று வேதனை தெரிவிக்கிறார்.
முன்னதாக, ஏப்ரல் மாதம் உள்ளூர் பத்திரிகையாளர்களுடனான முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்திய கூட்டத்தில், "மருத்துவ பற்றாக்குறைகள் குறித்து வதந்திகளைப் பரப்பும் எவரிடமிருந்தும் சொத்துக்களைக் கைப்பற்ற உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
இதற்குபின்பு தான் உத்தரபிரதேச மருத்துவமனைகளில் பலவற்றில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட பலர் தங்களின் உயிர்களை விட நேர்ந்தது. உத்தரபிரதேச அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடியுள்ளன. "ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ரெமெடிவிர் ஊசி போன்றவற்றின் பற்றாக்குறை இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஒரு முழுமையான பொய். கொரோனா தொடர்பான மரணங்களை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது" என்று உத்தரபிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவருமான அஜய் குமார் லல்லு கூறியிருக்கிறார்.
அரசின் அலட்சியத்தால் உயிர்கள் பறிபோவது வெளிப்படையாக தெரிந்தும், மாநிலத்தில் எங்கும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று பத்திரிகைகள் அனுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி உத்தரபிரதேச அரசு பதில் கொடுத்தது. மேலும், "அரசாங்கத்திற்கு எதிராக எழுதியதற்காக பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தவறான தகவல்களின் மூலம் வெறுப்பு, பாகுபாடு அல்லது வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சமூக ஊடகங்களில் உதவி கோருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய எந்தவொரு உத்தரவையும் அரசாங்கம் வெளியிடவில்லை. அதேநேரம், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த அச்சங்களை பொய்யாக பரப்பியவர்களுக்கு எதிராக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது" என்று அதே மெயில் விவரிக்கிறது.
அரசாங்கம் இப்படி கூறினாலும், இது அனைத்தும் பூசி மெழுகும் நடவடிக்கை என்பதை மற்றொரு சம்பவம் சுட்டிக்காட்டியது. அம்மாநில நீதிபதி சித்தார்த்த வர்மா தலைமையிலான இரண்டு நீதிபதி பெஞ்ச் ஏப்ரல் 27 அன்று ஒரு மனுவை விசாரித்தபோது, "தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஒருபடுக்கையாவது கிடைத்துவிடும் என்று மக்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் வெளியே வரிசையில் காத்துகிடப்பதை இங்கு எளிதாகவே காண முடிகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவமனை படுக்கை வசதி கிடைப்பதென்பது, மாநிலம் முழுக்க நிலவி வருகிறது" என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் நிலைமை மோசமாகி செல்வதை தடுக்க முடியாமல் யோகி அரசு திணறி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்