Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செயல்திறன்கள் முதல் வகைகள் வரை... கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நடப்பது எப்படி? - ஓர் அலசல்

தடுப்பூசி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? எல்லா தடுப்பூசிகளும் ஒரேமாதிரியானவையா? - கொரோனா தடுப்பூசி உருவாகும் விதம் மற்றும் தடுப்பூசி வகைகள் குறித்து சற்றே தெளிவுபட பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை முதல் அலையைவிட மிகத் தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில் உருமாறிய வைரஸ்களால் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், சிறார்களும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும், உருமாறிய வைரஸுகளின் தாக்கமும் மிக மிக அதிகமாக உள்ளது. பலருக்கும் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு முன்கள பணியாளர்கள் தொடங்கி வயதுவாரியாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியையும் நமது நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலருக்கும் எந்த தடுப்பூசி சிறந்தது? இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? தடுப்பூசிகளின் செயல்திறன் என்ன? என்னென்ன மாதிரியான பக்கவிளைவுகளை தடுப்பூசிகள் ஏற்படுத்தும்? - இப்படி பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துவருகின்றன. இந்த கேள்விகளுக்கு நிபுணர்களும், மருத்துவர்களும் பல விளக்கங்களைக் கொடுத்துவருகின்றனர்.

image

தடுப்பூசி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? எல்லா தடுப்பூசிகளும் ஒரேமாதிரியானவையா?

தடுப்பூசிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவையா என்றால் இல்லை. ஒரு நோய்க்கான வெவ்வேறு தடுப்பூசிகளின் பலன் ஒன்றாக இருந்தாலும்கூட அவற்றில் மாறுபாடுகள் இருக்கும். குறிப்பாக தடுப்பூசி உருவாகும்விதம் மற்றும் செய்முறையில் மாறுபாடுகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாதிப்பு ஏற்படுத்தாத வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில தடுப்பூசிகளில் நோய்க்கிருமிக்கு காரணமான வைரஸின் இறந்தவை பயன்படுத்தப்படுகின்றன.

அதாவது தடுப்பூசிகளில் நோயை உருவாக்கும் கிருமிகளின் சிறிய பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அதில் தடுப்பூசியை வீரியமிக்கதாக மாற்றும் மற்ற எதிர்ப்பாற்றல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது தடுப்பூசியை வீரியமிக்கதாகவும், செயல்திறனுடனும் வைக்கிறது.

அதேபோல் அனைத்து தடுப்பூசிகளிலும் ஆண்டிஜென்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டிஜென்கள் என்பவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இந்த ஆண்டிஜென்கள் என்பவை பொதுவாக நோய்க்கிருமியின் சிறிய பாகமாக இருக்கலாம் அல்லது செயலிழக்கப்பட்டவையாக இருக்கலாம்.

இந்தத் தடுப்பூசியை உடலில் செலுத்தும்போது அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உடலில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் நுழையும்போது அந்த வைரஸுகளால் பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் போகிறது.

image

தடுப்பூசி வகைகள்

செயலிழக்கப்பட்ட தடுப்பூசிகள் (Inactivated vaccines): இந்த வகை தடுப்பூசிகளில் பல செயலிழக்கப்பட்ட வைரஸ்களுடன், அதாவது இறந்த வைரஸ்களுடன் வைரஸ் புரதங்கள் அடங்கியுள்ளன. இந்த இறந்த வைரஸ்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. அதேசமயம், இவை உடலுக்குள் செலுத்தப்படும்போது, உடலுக்குள் நுழையும் நோயைப் பரப்பும் வைரஸ்கள் மேற்கொண்டு பரவமுடியாமல் போகிறது. அதாவது, தடுப்பூசியில் செலுத்தப்பட்ட ஆன்டிஜென்களுடன் கூடிய வைரஸானது நோய் பரப்பும் வைரஸை உடலுக்குள் மேற்கொண்டு பெருக்கம் அடையமுடியாமல் செய்கிறது.

இந்தியாவில் கோவாக்சின், சீனாவின் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் போன்ற தடுப்பூசிகள் இந்த முறையையே பின்பற்றுகின்றன.

image

லைவ் தடுப்பூசிகள் (Live-attenuated vaccines): இந்த வகை தடுப்பூசிகளில் உயிருள்ள, அதேசமயம் தீங்குவிளைவிக்காத சளி வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உடலில் உருவாக்கும். தீங்கு விளைவிக்காத வைரஸுகளை செலுத்தும்போது, அது உடலின் மரபணுக்களை புரிந்துகொண்டு ஸ்பைக் புரதங்களை உருவாக்குவதன்மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். எனவேதான் இவை 'வெக்டர்' தடுப்பூசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஸ்புட்னிக் -வி, ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் இந்தியாவின் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் இந்தமுறையில்தான் உருவாக்கப்படுகிறது.

image

நியூக்ளிக் அமில தடுப்பூசிகள் (Nucleic Acid Vaccines): ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்த முறையில்தான் தயாராகின்றன. இந்தத் தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் DNA அல்லது mRNAவின் முழுமையான அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதாவது நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்து உடலிலுள்ள RNAக்களை அழித்துவிடாதபடிக்கு, அதன்மீது ஒருவித பாதுகாப்பு படலத்தை உருவாக்கும். இந்தவகை தடுப்பூசிகள் நேரடியாக உடலில் நுழையும் வைரஸுகளை வீரியத்துடன் அழித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே இந்தமுறையில் உருவாகும் தடுப்பூசிகளுக்கு செயல்திறன் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்