நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. அதிகம் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகள், அவர்களை பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதிக அளவு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதிகம் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் உதவியுடன் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி பற்றாக்குறையே தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் நாமக்கல்லில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் தற்காலிக ஏற்பாடாக தனியார் நிறுவனங்களிடமிருந்து குறிப்பாக ஈரோடு, சேலம் பகுதியில் இருந்து ஆக்சிஜனை பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஆக்சிஜன் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்கள் தங்களது மாவட்டத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்க முடியவில்லை எனக் கூறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை வழங்காமல் நிறுத்தி விட்டனர். இதனால் இந்த தனியார் மருத்துவமனைகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருவதோடு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வெளி மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துமனைக்கு அனுப்பும் நிலையே காணப்படுகிறது.
குறிப்பாக நோய்த் தொற்றி அதிகளவு பாதிக்கப்பட்ட அதாவது அதிகளவு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் நிலையே காணப்படுகிறது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இன்றைய சூழ்நிலையில் இன்று மாலை வரை மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் அதன் பின்னர் தங்களது நிலை என்னவாகும் என்று கூட தெரியவில்லை என்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் பின்னடைவை சந்தித்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்