Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு நிறுத்தம்: மத்திய அமைச்சர் தகவல்

மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் ரெம்டிசிவிர் மருந்து ஒதுக்கீடு நிறுத்தப்படுவதாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறியுள்ளார்.

கடந்த வாரங்களில், கொரோனாவுக்கான மருந்துகளில் அதிக தேவையை (டிமாண்ட்) ஏற்படுத்தியது ரெம்டெசிவிர் மருந்துகள். இது கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு உயிர்க்காக்கும் மருந்தாக அமையாது என்றாலும்கூட, இதன்மூலம் பாதிப்பின் தீவிரத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் எனக்கூறி மருத்துவர்கள் இதை பரிந்துரைத்தனர். பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, மருந்தின் மீதான தேவையும் அதிகரித்தது. இரண்டாவது அலையை எதிர்கொண்டதில், ரெம்டெசிவிரின் பங்கு, தவிர்க்க முடியாததாகவே இருந்தது.

image

சூழலை சமாளிக்க, இந்த ஆன்டி-வைரல் மருந்தின் உற்பத்தியை மத்திய மாநில அரசுகள் அதிகப்படுத்தி வந்தன. கடந்த ஏப்ரல் 11 ம் தேதி, 33,000 என்றிருந்த ரெம்டிசிவிர் ஒருநாள் விநியோகம், தற்போது தினமும் 3.5 லட்சம் குப்பிகள் என்று உயர்ந்துள்ளாக மத்திய அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. இது, தேவையை விடவும் அதிகமாகவே இருப்பதனால் இனி மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரெம்டெசிவிர் விநியோகம் திட்டமிடப்படாது என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறியுள்ளார்.

ரெம்டெசிவிர் தயாரிப்பு பணிகள், ஏப்ரல் மாத கணக்குப்படி 20 இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இது தற்போது 60 என்று உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதுபற்றிய தன்னுடைய ட்வீட்டில், மண்டாவியா "ரெம்டெசிவிர் உற்பத்தி, பத்து மடங்கு வேகமாக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடும் நிறைவோடும் உங்களோடு பகிர விரும்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், ஏப்ரல் 11 ம் தேதி கணக்குப்படி, ஒரு நாளில் 33,000 குப்பிகள் விநியோகிக்கப்பட்ட ரெம்டெசிவிர், இப்போது ஒரு நாளில் 3,50,000 குப்பிகள் விநியோகிக்கப்படுகிறது.

ரெம்டெசிவிர் உற்பத்தி நிலையங்களும், ஒரு மாதத்தில் புதிதாக 40 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பலனாக, தற்போது இந்தியாவில் தேவைக்கு அதிகமாக ரெம்டெசிவிர் இருப்பு இருக்கிறது. அதனால் மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் ரெம்டிசிவிர் ஒதுக்கீடு நிறுத்தப்படுகிறது.

image

ஒதுக்கீடு நிறுத்தப்பட்டாலும், இருப்பு எந்தளவுக்கு உள்ளதென கண்காணிக்க, குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இப்போதைக்கு, 50 லட்ச ரெம்டெசிவிர் குப்பிகள் இந்தியாவில் அவசர தேவைக்காக இருப்பில் இருக்குமாறு அவர்கள் கண்காணித்து வருவர். அந்தக் குழுவில், தேசிய மருந்துகள் விலை நிறுவனம் மற்றும் சி.டி.எஸ்.சி.ஓ இருப்பார்கள்" எனக்கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில், இந்தியாவில் ரெம்டெசிவிருக்கான தேவை திடீரென அதிகரித்ததில், அதற்கான ஏற்றுமதி யாவும் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்