சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது போல் ஆவி பிடிக்கும் இயந்திரம் மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே காவல்துறை எஸ்பி பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசார் சார்பில் பயணிகள் நீராவி பிடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை சென்ட்ரல் ரெயில்வே காவல்துறை எஸ்பி பழனிக்குமார் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
10 ஆவிபிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகள் மூலம் ஆவிபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ஆவி பிடித்த பிறகும் முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக ரயில்வே காவல்துறை எஸ்பி பழனிக்குமார் கூறுகையில், "ஆவிபிடிப்பதால் சுவாச பிரச்சினைகள் நீங்கும் என இயற்கை மருத்துவர்கள் அறிவுறுதியுள்ளதால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போல பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளதாக" என்று எஸ்பி பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்