Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வீடியோ சந்திப்பில் வரவிருக்கும் புதுமை- எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூகுள்!

கொரோனா பாதிப்பு சூழலில் பெரும்பாலானோர் வீடியோ சந்திப்பு வசதிக்கு பழகியிருக்கும் நிலையில், வீடியோ  வசதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அறிவிப்பை கூகுள் வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொலைவில் இருப்பவர்களை நேரில் பார்த்து பேசுவதோடு, அவர்கள் நம் எதிரிலேயே இருக்கும் உணர்வை பெறக்கூடிய வகையில் இந்த சேவை அமைந்திருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய சேவை, தயாரிப்புகள் மற்றும் எதிர்கால அம்சங்களை அறிமுகம் செய்வதற்காக ஆண்டுதோறும் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். பிரதானமாக டெவலப்பர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரமுகர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகள், நிறுவனத்தின் புதிய அறிமுகங்களுக்கான முன்னோட்டமாக அமைவது வழக்கம்.

image

அந்த வகையில் கூகுள் நிறுவனம் தனது ஐ/ஒ தொழில்நுட்ப நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது. கொரோனா தொற்று சூழலில் இந்த நிகழ்ச்சி இணையம் வழியே மெய்நிகர் வடிவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கூகுள் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாலும் இதில் ஹைலைட்டாக அமைந்தது, வீடியோ சந்திப்பில் எதிர்காலத்தில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய வசதி தான்.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்த வசதி பற்றிய முன்னோட்டத்தை அளித்தார்.

“ சில ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்பத்தால் என்ன எல்லாம் சாத்தியம் என்பதை கண்டறிய பிராஜெக்ட் ஸ்டார்லைன் எனும் திட்டத்தை துவக்கினோம். அதிக துல்லியமான கேமிரா, சக்திவாய்ந்த சென்சார்கள் மூலம், இது தோற்றம் மற்றும் வடிவத்தை பல கோணங்களில் படம் பிடித்து அவற்றை ஒன்றிணைத்து மிகவும் விரிவான ரியல் டைம் 3டி மாதிரியை உருவாக்குகிறது” என சுந்தர் பிச்சை குறிப்பிட்டிருந்தார்.

சுந்தர் பிச்சனையின் பில்டப் மிகவும் பலமாக இருக்கிறதே என நினைக்கலாம். இந்த சேவையும் அப்படித்தான் இருக்கும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், வீடியோ உரையாடல்களில் மறுமுனையில் இருப்பவரை முப்பரிமான ஹோலோகிராம் வடிவில் இது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

image

ஹோலோகிராம் என்பது ஒளியியல் நுட்பத்தை கொண்டு மெய்நிகர் தோற்றத்தை உருவாக்குவதாகும். இதன்படி பார்த்தால், வீடியோ சந்திப்பில் பேசும்போது, மறுமுனையில் இருப்பவர் நம்முடையே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வை பெறலாம்.

இந்த வசதியை ஒரு மாயக்கண்ணாடி போன்றது என கூகுள் வர்ணிக்கிறது. மென்பொருள் மற்றும் வன்பொருள் மாயத்தால் எங்கோ இருப்பவரை அருகே பார்க்கும் உணர்வை பெறுவதோடு அவர்களை கையால் தொட்டுப்பார்க்கும் உணர்வையும் பெறலாம் என்கிறது கூகுள்.

ஜூம், கூகுள் மீட் உள்ளிட்ட சேவைகள் வீடியோ சந்திப்புகளை எளிதாக்கி இருந்தாலும், நேரில் பார்த்து பேசாமல் வீடியோ வழியே பேசுக்கொண்டிருப்பது ஒருவிதமான வீடியோ களைப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்நிலையில், கூகுள் வீடியோ சந்திப்புகளை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் சேவையை அறிவித்துள்ளது.

இந்த சேவையை எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், நடைமுறையில் எப்போது அறிமுகம் ஆகும் எனும் தகவலை கூகுள் வெளியிடவில்லை. இப்போதைக்கு கூகுள் அலுலவலகத்தில் சோதனை முறையில் இது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வரும் மாதங்களில் இந்த சேவை பற்றி கூடுதல் தகவல்களை வெளியிடுவோம் என கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஸ்மார்ட்போன் மூலம் கார் சாவியை இயக்கும் வசதி, செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பட்ட உரையாடல் வசதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் கூகுள் வெளியிட்டது. ஆண்ட்ராய்டு தொடர்பான புதிய பதிப்பு அம்சங்களையும் வெளியிட்டது.

கூகுள் அறிவிப்பு தொடர்பாக மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

- சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்