தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக மதுரைக்குச் சென்ற முதல்வர், முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அந்த 7 பேரை விடுவிப்பதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
மீண்டும் 4 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு: இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,209 பேர் உயிரிழந்துள்ளனர்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு?- நாளை ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை நீட்டிப்பதைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
உயிரிழப்பும், ஆட்சியர் விளக்கமும்: கடலூரில் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜனை நிறுத்தியதால் உயிரிழந்ததாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் கருவியை எடுத்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
மதுரை புதிய கொரோனா சிகிச்சை மையம்: மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
விழுந்து நொறுங்கிய போர் விமானம்: பஞ்சாப் மாநிலத்தில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கியதில், விமானி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு: தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குணப்படுத்திவிடலாம் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
பீகாரில் வெள்ளை பூஞ்சை தாக்குதல்: கருப்பு பூஞ்சையின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பீகாரில் வெள்ளை பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போரைத் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2,100 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்: கொரோனா தடுப்புப் பணிக்காக புதிதாக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கை முறையாக அமல்படுத்த கோரிக்கை: டெல்லி போன்று முழு ஊரடங்கை முறையாக அமல்படுத்தி தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மின் கட்டணத்தை மக்களே கணக்கெடுக்கலாம்: மே மாதத்திற்கான மின் கட்டணத்தை மக்களே சுயமாக கணக்கீடு செய்து செலுத்தலாம் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கணக்கிடப்பட்டிருந்தால் அதனை நீக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 11 நாள் போர் நிறுத்த உடன்படிக்கை அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. அமைதியை கட்டியெழுப்ப உண்மையான வாய்ப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கை நிறுத்த மருத்துவர்கள் கோரிக்கை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த ஜப்பான் அரசுக்கு கோரிக்கை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் நடமாட்டம் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டி, மருத்துவர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்