Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒரு வேளையாக குறைந்த உணவு.. தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக வதைக்கும் கொரோனா!

கொரோனா இரண்டாவது அலை தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக வதைத்து வருகிறது என சமீபத்திய ஆய்வறிக்கை சொல்கிறது.

கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சொல்லி மாளமுடியாதவை. சாதாரண மக்கள் முதல் பல்வேறு தரப்பட்ட மக்கள் வரை இதனால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதில் தொழிலாளர் வர்க்கத்தினர் சந்தித்துள்ள பாதிப்பு குறித்து வெளியாகியுள்ள அறிக்கை அவர்களின் துயரத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டே தொற்றுநோயால் ஏற்பட்ட தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் வர்க்கம் கடுமையாக பாதிப்பை சந்தித்தது. இப்போது இரண்டாவது அலையின் காரணமாக போடப்பட்டிருக்கும் லாக் டவுனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையை அடுத்து வேலை இழப்புக்கள் போன்ற காரணங்கள் அவர்களின் கவலைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

image

அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU), கர்நாடகா ஆடை மற்றும் ஜவுளித் தொழிலாளர் சங்கம் (GATWU) மற்றும் உள்நாட்டு தொழிலாளர் உரிமைகள் சங்கம் (DWRU) ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். இதற்காக மே 1 முதல் மே 6 வரை மொத்தம் 73 புலம்பெயரா தொழிலாளர்கள் மற்றும் 46 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொலைபேசியில் பேட்டி காணப்பட்டனர். மேலும், அறிக்கையைத் தயாரிக்கும்போது செய்தித்தாள்கள் மற்றும் ட்விட்டரில் இருந்து குறிப்பிடத்தக்க ட்வீட்டுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்த ஆய்வறிக்கைக்கு பதிலளித்தவர்களில் 82 சதவிகிதத்தினர் கொரோனா காரணமாக அரசு விதித்துள்ள லாக் டவுன் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்ததாகக் கூறியுள்ளனர்.

குறிப்பாக ஆடைத் தொழில்துறை தொழிலாளர்கள், வண்டி ஓட்டுநர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர விற்பனையாளர்கள் ஆகியோர் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக ஒரு நாளைக்கு மூன்று வேளைகளில் இருந்து இரண்டு அல்லது ஒருவேளை உணவாக தங்களது உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாகவும், இதற்கு மற்றொரு காரணமாக லாக் டவுனால் போதுமான அளவு உணவுப் பொருட்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வண்டி ஓட்டுநர்களில் சுமார் 68 சதவீதம் பேர் உணவு ஏற்பாடுகளில் சிரமங்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் 50 சதவீதம் பேர் தற்போதைய லாக் டவுன் காலகட்டத்தில் தங்களை தக்கவைக்க போதுமான உணவுப் பங்கு இல்லை என்று கூறியுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளனர்.

நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர், கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் தங்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிட கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இதேபோல், கர்நாடக மாநிலம் ஹூப்லியில் ஒரு வண்டி ஓட்டுநர் பிரதீப் குல்கர்னி, லாக் டவுன் காலங்களில் காவல்துறையின் அடக்குமுறைகள் அதிகரித்துள்ளது. அவர்களால் வாடிக்கையாளர்களை ரயில் நிலையத்திற்கு கூட அழைத்துச் செல்ல முடியவில்லை என்கிறார்.

image

மேலும், "நான் மாதத்திற்கு, ரூ.12,000 கடன் செலுத்த வேண்டும். வட்டி மற்றும் நிலுவைத் தொகையுடன், இது ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், ஜனவரி முதல் மார்ச் வரை, நான் குறைந்தது ரூ.8,000 வரை சம்பாதிக்க முடிந்தது. இதனால் கடனை திருப்பிச் செலுத்த நண்பர்களிடமிருந்து கடன் வாங்கினேன். ஆனால் இப்போது, ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாமல் இருக்கிறேன்" என்று குல்கர்னி கூறுகிறார்.

இதற்கிடையே, இதே அறிக்கை, லாக் டவுன் காரணமாக காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்தல் மற்றும் பொது விநியோக முறை மூலம் போதிய ரேஷன் வழங்கல் ஆகியவற்றால் தொழிலாள வர்க்கத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பு எவ்வாறு கடுமையாக சமரசம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பலர் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடன்களை வாங்குவதை நாடுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆடைத் தொழில்துறை தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டில் போடப்பட்ட முதல் லாக் டவுனின்போது சந்தித்த பொருளாதார சரிவு தொழிலாளர்கள் மீது நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவு அவர்கள் வருவாயில் சரிவைக் கண்டனர். மேலும் 50 சதவீத திறன் கொண்ட பல தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களைத் திரும்பப் பெற்றன என்றும் அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. அறிக்கையின்படி, கொரோனா தொடர்பான உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் ஹெல்ப்லைன்களைப் பற்றி 53 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். மேலும் ஹெல்ப்லைனை அறிந்தவர்களில், 86 சதவீதம் பேர் இதை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்