காஸாவில் 11 மாடி கட்டடத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேவைப்படும் வரை ஹமாஸ் இயக்கதுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இதனிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 42 பேர் கொல்லப்பட்டனர்.
"உங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம். அதற்குள் கட்டடத்தில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்..." - இப்படித்தான் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்ததாக கட்டட உரிமையாளர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். கட்டட உரிமையாளர் கூடுதலாக 10 நிமிடம் கேட்டுள்ளார். கேமரா உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருப்பதால் அவற்றை கீழே கொண்டு செல்ல அவகாசம் கோரினார் அவர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், சரியாக ஒரு மணி நேரத்தில் கட்டடம் தாக்குதல் நடத்தி தகர்க்கப்படும் எனக் கூறிவிட்டது. காஸாவில் அமைந்திருந்த அந்த 11 மாடி அல்-ஜலா கட்டடத்தில் 60 குடும்பங்கள் வசித்து வந்தன. அல்ஜஸீரா, அஸோசியேட்டட் பிரஸ் ஆகிய செய்தி நிறுவனங்களும் அங்கு தான் செயல்பட்டு வந்தன.
இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையை அடுத்து கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு அனைவரும் கீழே இறங்க தொடங்கினர். பெரும் பதற்றத்துடன் குடியிருப்புவாசிகள், செய்தியாளர்கள் கட்டடத்தைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து சரியாக ஒரு மணி நேரத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். மூன்று ஏவுகணைகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் ஒரு நிமிடத்திற்குள் 11 மாடி கட்டடம் கரும்புகை எழும்ப தரைமட்டமானது.
அந்த கட்டடத்தில் ஹமாஸ் குழுவினரின் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்கள் ஆயுதங்களை அங்கு பதுக்கி வைத்திருப்பதே தாக்குதலுக்கு காரணம் என்கிறது இஸ்ரேல். ஆனால் அப்படி ஏதும் இல்லை என்று கட்டட உரிமையாளரும், அங்கு பணியாற்றி வந்த செய்தியாளர்களும் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினரிடையேயான மோதல் தொடர்ந்து ஏழாவது நாளாக நீடிக்கிறது. இதுவரையிலான தாக்குதலில் 160-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் வசிக்கும் இல்லத்தை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொள்ளும் தாக்குதல்களை இருதரப்பும் நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டேரஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தேவைப்படும் வரை ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட 42 பேரில் 10 பேர் குழந்தைகள்
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 42 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை முதல் தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. இருபுறமும் ஆயிரக்கணக்கான ராக்கெட்களை வீசி தாக்குதல் தொடர்கிறது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதில் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருந்த சுரங்க பகுதியை குறிவைத்தே விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும் சுரங்கப்பகுதி உடைந்ததால் வீடுகள் இடிந்ததாகவும் இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்