முழு ஊரடங்கை அனைவரையும் கடைபிடிக்க வைக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது சென்னை காவல்துறை. அது என்ன?
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் முழு ஊரடங்கை மீறி சிலர் சாலைகளில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சென்னையில் காவல்துறையினர் 318 இடங்களில் வாகன சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்தும், அத்துமீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இன்று சென்னையின் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வாகன போக்குவரத்து மிகமிக குறைந்து காணப்படுகின்றன. சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் குழுமமாக அமர்வது, இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவது என கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணிப்பதற்காக சென்னை காவல்துறையினர் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வீடியோ பதிவுகளை வைத்து பொறுப்பு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அண்ணாசாலை, மெரீனா காந்தி சிலை, பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் (15.05.2021) நடத்திய வாகன தணிக்கை மற்றும் சோதனையில், போக்குவரத்து காவல் குழுவினரால் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,933 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சட்டம்- ஒழுங்கு காவல்துறையினர் நடத்திய வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 2,485 வழக்குகளும், தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 278 வழக்குகளும், அரசு அறிவித்த நேரத்தை மீறி கடையை திறந்தவர்கள் மீது 55 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைப்போல முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 9,62,133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 8.4.2021-ல் இருந்து நேற்று வரை இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 18,096 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாக 33,566 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.4.2021-ல் இருந்து நேற்று வரை பதிவான வழக்குகள் இது. நேற்று மட்டும் 1410 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாதோரிடன் இதுவரை ரூ. 19,24,26,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி கடைபிடிக்காதோரிடம் இதுவரை ரூ. 1,67, 83,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்