பெப்சி, கோககோலா முதலான குளிர்பான நிறுவனங்களுக்கு இந்த ஆண்டும் இந்தியாவில் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அனாலிட்டகல் நிறுவனமான 'கிரிசில்' (CRISIL) கணித்துள்ளது.
2020-ம் ஆண்டு கோடை காலத்தில் கொரோனா பரவல் அதிகரித்தத் தொடங்கியதால், இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், கடந்த ஆண்டு குளிர்பான விற்பனையில் சரிவு இருந்தது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிவு இருந்ததாக கிரிசில் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டிலும் குளிர்பான நிறுவனங்களின் விற்பனை குறையும் என கிரிசில் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்தியா முழுவதிலும் இல்லை என்றாலும், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த ஆண்டிலும் விற்பனை சரியும் என கிரிசில் கணித்திருக்கிறது.
இந்தியாவில் குளிர்பான பிரிவில் 80 சதவீத சந்தையை பெப்சி மற்றும் கோககோலா நிறுவனங்கள் வைத்துள்ளன. முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் ஆண்டு விற்பனை சுமார் ரூ.20,000 கோடி. இதில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் நான்கில் மூன்று மடங்கு விற்பனை நடக்கிறது.
பொதுமுடக்கம், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது குறைந்திருப்பது, ஓட்டல்கள், சுற்றுலா, தியேட்டர், மால் என மக்கள் கூடுவது குறைந்திருப்பதால் குளிர்பான விற்பனை குறையும் என கிரிசில் தெரிவித்திருக்கிறது.
தடுப்பூசி செலுத்தும் வேகத்தை பொருத்துதான் குளிர்பான விற்பனை இருக்கும். இரண்டாம் காலாண்டில் விற்பனை உயரலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் செலவு குறைப்பு, புதிய புராடக்ட் கொண்டுவருவதால் செயல்பாட்டு லாபத்தில் பெரும் தாக்கம் இருக்காது என கிரிசில் தெரிவித்திருக்கிறது.
பெப்சிகோ நிறுவனத்தின் பார்டனரான வருண் பெவரேஜ் நிறுவனம் கிரிசில் நிறுவனத்தின் கணிப்பை மறுத்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட நிறுவனமான வருண் பெவரேஜஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு விற்பனை 34 சதவீதம் உயர்ந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறது.
ஜூன் காலாண்டில் முடிவுகளைப் பார்த்தால் விற்பனை எவ்வளவு பாதிப்படைந்திருக்கிறது என்பது தெரிந்துவிடும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்