Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'ஹோட்டலிலிருந்து பணியாற்றுங்கள்'... ஐ.ஆர்.சி.டி.சி.யின் புதிய முன்னெடுப்பு

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பாக, வீட்டிலிருந்தே வேலை பார்ப்போருக்கு அதற்கான மாற்றாக, 'ஹோட்டலில் இருந்து பணியாற்றுங்கள்' என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சமாக, பணி செய்யும் இடம் புத்துணர்ச்சி தரும் வகையிலும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூறியுள்ளது. இப்போதைக்கு இந்த புதிய முயற்சி, கேரளாவில் மட்டும் அமலுக்கு வந்திருக்கிறது.

தங்கள் ரயில்வே வாடிக்கையாளர்களிடம், ஊரடங்கு நேரத்தில் தாங்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் வளர்ப்பதற்கான நோக்கத்தில்தான் இவையாவும் மேற்கொள்ளப்படுவதாக, ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா அம்சங்கள் சார்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

image

ஒருவர், ஐந்து நாள் இரவு தங்குவதற்கு, ரூ.10,000 வரை இங்கு வசூலிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. தூய்மைப்படுத்தப்பட்ட அறைகள், மூன்று வேளை உணவு, டீ / காபி, இணையசேவை, பாதுகாப்பான வாகன நிறுத்தம், பயண காப்பீடு போன்றவை பணி செய்யும் இடத்தில் உள்ளடக்கமாக இருக்குமென சொல்லப்படுகிறது.

முதற்கட்டமாக மூனார், தேக்கடி, குமரகோம், ஆலப்புழா, கோவளம், வயநாடு, கொச்சி போன்ற பகுதிகளில் இது தொடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகத்தீவிரமாக பின்பற்றுவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. இணையம் வழியாகவும், ஐ.ஆர்.சி.டி.சி. மொபைல் செயலி வழியாகவும் முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

"பொதுமுடக்க காலத்தில், வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்போருக்கு புதுவிதமான அனுபவத்தை தருவதற்காக இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். அவர்கள் வீடு போலவே இங்கே அவர்களுக்கு தடையின்றி எல்லா வசதிகளும் சௌகரியமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்