Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'அலர்ட்' தந்த கெஜ்ரிவால் மீது சாடல்; சிங்கப்பூருக்கு 'ஆதரவாக' மத்திய அரசு... நடப்பது என்ன?

சிங்கப்பூரில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாகவும், அதனால் இந்தியாவிற்கான அந்நாட்டின் விமான சேவையை ரத்து செய்யுமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் எதுவும் இல்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, 'டெல்லி முதல்வரின் கருத்து, இந்தியாவின் கருத்து அல்ல' என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்க, உச்ச கட்டமாக குழப்பம் நிலவுகிறது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? - விரிவாகப் பார்ப்போம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றைய தினம் தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில், சிங்கப்பூரில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாகவும், அது குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாகவும் கவலை தெரிவித்து, அதை தடுக்க சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

image

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக கருத்து வெளியிட்ட சிங்கப்பூர் அரசு, தங்கள் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்றும், B.1.617.2 வகை வைரஸ்தான் தங்கள் நாட்டில் பரவி வருவதாகவும், அது இந்தியாவிலிருந்து உருமாறிய வைரஸ் எனவும் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம் நேரடியாக டெல்லி முதல்வரின் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்திற்கு பதிலளித்துள்ளது.

இந்த விவகாரம் நேற்றைய தினம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், டெல்லி முதல்வருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள அதிகாரிகளை சிங்கப்பூர் அரசாங்கம் அழைத்து டெல்லி முதல்வரின பதிவிற்கு கடுமையான மறுப்பினை பதிவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். உருமாறிய கொரோனா மற்றும் விமான சேவை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கருத்துகளை வெளியிட டெல்லி முதல்வருக்கு எந்தவிதமான திறனும் இல்லை என்பதை சிங்கப்பூர் அரசிடம் இந்திய தூதர் விளக்கமாக கொடுத்திருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

image

அதேபோல இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவிற்கான ஆக்சிஜன் தேவைகளுக்கான உதவிகளை அந்நாடு செய்து வருவதாகவும், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை விமானங்களை ஆக்ஸிஜன் எடுத்து வருவதற்காக இந்தியாவிற்கு கொடுத்து உதவியதிலிருந்தே இரு நாட்டுக்கும் இடையிலான உறவின் நெருக்கம் தெளிவாக தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சிலரது பொறுப்பற்ற கருத்துக்கள் இரு நாட்டின் உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அதனை செய்திருப்பதாகவும், டெல்லி முதல்வரின் கருத்து இந்தியாவின் கருத்து அல்ல; அவர் இந்தியாவிற்காக பேசவில்லை என்பதை தான் தெளிவுபடுத்துவதாகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்து வருவதை உணர்ந்து, நாடு முழுவதும் பள்ளிகளை மூட உத்தரவிட்டிருந்தது. மேலும், குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தவும் உத்தரவுகளை பிறப்பித்த நிலையில்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசிற்கு சிங்கப்பூர் உடனான விமான சேவை போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த கோரிக்கை வைத்திருந்தார்.

image

ஆனால், சிங்கப்பூர் அரசு அதனை மறுத்த உடன், டெல்லி முதல்வருக்கு மத்திய அரசு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதில் கூறுவதும், 'இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதல்வரின் கருத்து, இந்தியாவின் கருத்து அல்ல' எனக் கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாக இருக்கும் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஒரு மாநில முதல்வர் வைக்கக்கூடிய ஒரு கோரிக்கையை எந்தவிதமான அடிப்படை தரவுகளும் இல்லாமல் மத்திய அரசு முழுமையாக புறக்கணிப்பது ஏன் எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து உருவான உருமாறிய கொரோனா வைரஸ்தான் சிங்கப்பூர் நாட்டில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என அந்நாடு வெளிப்படையாகக் குற்றம்சாட்டி, அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த ஒரு பதிலையும் வழங்காமல் இருந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு கேள்விகள் எழுப்பப்படுகிறது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருக்கக்கூடிய பதில்கள்தான் என்னவோ?

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்