முழு ஊரடங்கு காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு வீடுகளுக்கே சென்று காய்கறி விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், மாநிலத்தின் தினசரி காய்கறி மற்றும் பழங்கள் தேவை 18 ஆயிரம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், 4,380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள், அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை, நடமாடும் வாகனங்கள் மூலம் நடைபெற உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்