5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்கப் பணம் தேவை என மாம்பழம் விற்றுவந்த நிலையில், சிறுமிக்கு உதவி எண்ணி ஒரு மாம்பழத்துக்கு ரூ.10,000 என மொத்தம் 1.2 லட்ச ரூபாய்க்கு ஒரு டஜன் மாம்பழங்களை வாங்கியுள்ளார் அமேயா என்ற தொழிலதிபர்.
2020-ம் ஆண்டு தொடங்கிய நாள் தொட்டு, பள்ளிக்கல்லூரிகள் எதுவும் தற்போது வரை திறக்கவில்லை. அனைத்து வகுப்பினருக்கும் இணையவழி கல்வி மட்டுமே முழுவீச்சில் நடந்து வருகிறது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு இணைய வசதி, ஸ்மார்ட்போன் வசதி இல்லாத காரணத்தினால், பெரும்பாலான குழந்தைகள் கல்வி கற்க இயலாத நிலையும் உருவாகியுள்ளது.
இந்த மோசமான சூழலைச் சரிசெய்ய, தன்னார்வலர்கள் சிலர் தங்களால் முடிந்த எதாவது ஓர் உதவியை மாணவர்களுக்குச் செய்ய முன்வருகின்றனர். அப்படி உதவி செய்தவர்களில் ஒருவர்தான், மும்பையைச் சேர்ந்த அமேயா ஹெட்டே என்ற தொழிலதிபர்.
மும்பையில் துளசி குமாரி என்ற 11 வயது சிறுமி, வறுமை காரணமாக மாம்பழம் விற்று வந்துள்ளார். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, ஆன்லைன் வகுப்புக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோனை வாங்க நினைத்திருக்கிறார் அந்த சிறுமி.
துளசியின் நிலையை அறிந்த அமேயா, துளசியை நேரில் சந்தித்து அவரிடமிருந்து ஒரு டஜன் மாம்பழத்தை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அதாவது, ஒரு மாம்பழத்துக்கு 10,000 ரூபாய் என்ற கணக்கில் வாங்கியுள்ளார். இதனால், ஆச்சர்யப்பட்ட சிறுமி துளசி, இந்த தொகையினால் பொது முடக்கக் காலத்தில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அமேயா, மாம்பழம் வாங்கியதோடு நிற்கவில்லை. உடன், துளசிக்கு ரூ.13,000 மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனும் பரிசளித்திருக்கிறார்.
இந்த உதவியால் தற்போது 5-ம் வகுப்பு படிக்கும் தன் மகள் இனி வகுப்புக்குத் தவறாது சென்றுவிடுவாள் என நம்பிக்கை வந்திருப்பதாகச் சொல்லி, அமேயாவுக்கு மனம் நிறைந்து நன்றி தெரிவித்துள்ளார், சிறுமியின் தாய் தேவி.
சமூக வலைதளத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் பதிவைப் பார்த்தே, துளசிக்கு உதவும் எண்ணம் தனக்கு வந்ததாக அமேயா தெரிவித்துள்ளார். தன் படிப்புக்காக, இந்த சின்ன வயதில் துளசி எதிர்கொள்ளும் போராட்டத்தை தன்னுடைய இந்த உதவி குறைக்குமென்றும் அவர் கூறியுள்ளார்.
அமேயா அளித்த 1.2 லட்ச ரூபாய் பணம், துளசியின் தந்தையுடைய வங்கிக் கணக்கு மாற்றப்பட்டு, தந்தை மூலமாக துளசிக்கு அது சென்றடையும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்