தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது. நீட் விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் என சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கரு.நாகராஜன், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் பாஜக தங்கள் முழு சுயரூபத்தை வெளியில் காட்டியுள்ளது எனவும் விமர்சித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்?
நாராயணன் திருப்பதி, ஊடக செய்தித்தொடர்பாளர், தமிழக பாஜக
''சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால், பாஜக ஆதரவு தயார் என நயினார் நாகேந்திரன் கூறினாரே தவிர, நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கு ஆதரவு என்று அவர் கூறவில்லை. நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவாக கூறியும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
நீட் விவகாரத்தில் பாஜகவிற்கு இரட்டை நிலைப்பாடு என்பது இல்லை. நீட் தேர்வு வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நிலைப்பாடு. நீதிமன்றத்தை அவமதிக்கும் நிலைப்பாடுதான் திமுகவிடம் உள்ளது. உச்சநீதிமன்றம் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை கேட்டு, அதன் சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து பின்னரே நீட் தேர்வு இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்தது. நீட் தேர்வுக்கு எதிரான வாதங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டவை, தவறானவை என்பதை புரிந்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதனால்தான் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீட் விவகாரத்தில் அதிமுக சட்டரீதியாக அணுகியது. ஆனால் திமுக சட்டரீதியாக அணுகாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குழு அமைத்து, மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுதான் இங்கே பிரச்சனை'' என்றார்.
எஸ்.ஆர்.சேகர், பாஜக மாநில பொருளாளர்
‘ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிக்க முதல் கையெழுத்திடுவோம்’ என்றது திமுக. ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியனோ, 'நீட் நுழைவு தேர்வு இந்த நிமிடம் வரை அமலில் உள்ளது; அதற்கான பயிற்சி மைய கட்டணத்தை குறைக்க முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன்' என்றார். அவரின் இதுபோன்ற கருத்து மூலம் கூடைக்குள் இருந்த பூனை வெளிப்பட்டு, திமுகவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.
பாஜகவுக்கு என்றுமே ஒரே நிலைப்பாடு தான். நீட் தேர்வை ஆதரிக்கிறோம். முன்பு தனியார் கல்லூரி மருத்துவ இடங்கள் கோடிகளில் பேரம் பேசி விற்கப்பட்டது. தகுதியான பல மாணவர்களின் மருத்துவர் கனவை தகர்த்தது. இப்போது அவர்களது கனவை நனவாக்கும் நீட் தேர்வு வெளிப்படையாக நடக்கிறது. நீட் விலக்கு மட்டுமல்ல, திமுக கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை, சாத்தியமற்றவை. ஆட்சியில் அமரும் முன் ஒரு பேச்சு, வந்த பின்பு வேறு பேச்சு எதற்காக? நீட் வேண்டாம் என்ற அதிமுகவின் நிலைப்பாடு அவர்களுடையது. ஆனால் நீட் வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நிலைப்பாடு’’.
எஸ்.ஜி.சூர்யா, தமிழக பாஜக ஊடக செய்தித்தொடர்பாளர்
''2013-ஆம் ஆண்டு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கி உத்தரவிட வழிவகுத்ததே திமுக - காங்கிரஸின் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது குழு அமைக்க கூட தகுதி இல்லை என்று உயர்நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என மு.க.ஸ்டாலின் அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இனிமேலாவது திமுக மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு அவர்களது வாழ்க்கையில் விளையாடாமல் நீட் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டும்’’ என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்