Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேட்டூர் அணைக்கு அருகிலிருந்து தண்ணீரின்றி தவிக்கும் கிராமம்

மேட்டூர் அணையின் நீர்தேக்கத்திற்கு அருகிலேயே இருந்தும் 70 ஆண்டு காலமாக காவிரி நீர் கிடைக்காமல் தவித்து வருகிறது ஒரு கிராமம்.

பல்வேறு மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் மேட்டூர் அணைக்கு அருகிலேயே பல ஆண்டுகளாக வசித்து வந்தும், அணையின் தண்ணீரை கண்ணால் மட்டுமே காணமுடிகிறதே தவிர, பருக முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அடப்புக்காடு கிராம மக்கள்.

மேட்டூர் அணையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மல்லிகுந்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அடப்புக்காடு கிராமப்பகுதியினர் 70ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் கிடைப்பதற்காக போராடி வருகின்றனர். குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும், வாக்குறுதிகள் கானல் நீராய் கரைந்து போவதாகத் தெரிவிக்கின்றனர். ஊராட்சி மன்றத்தின் மூலமாக போடப்பட்ட ஆழ்துளைக் கிணறும் தற்போது பழுதடைந்ததால், குடிநீருக்காக காடு, மலை ஏறி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றுவருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

தற்போது குடிநீருக்காக அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் விவசாயக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றாலும், கொரோனா பரவலைக் காரணம் காட்டி தண்ணீர் எடுக்க அனுமதிக்காததால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மேலும், சாலை வசதி, மின் விளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கும் இவர்கள், இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊரைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து மல்லிகுந்தம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்லம்மாளிடம் கேட்டபோது, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்